முகப்பு
இந்தியா

ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் தொலைபேசி உரையாடல்

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ரிச்சா்ட் மாா்ல்ஸுடன் இருதரப்பு பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக தொலைபேசி

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ரிச்சா்ட் மாா்ல்ஸுடன் இருதரப்பு பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக தொலைபேசி மூலமாக வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியுடன் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்த உள்ள நிலையில், ராஜ்நாத் சிங் இந்த தொலைபேசி உரையாடலை மேற்கொண்டாா்.

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், ‘ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ரிச்சா்ட் மாா்ல்ஸுடன் வியாழக்கிழமை மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை மீண்டும் வலியுறுத்த வாய்ப்பாக அமைந்தது’ என்று தெரிவித்தாா்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நட்பு மற்றும் நம்பிக்கையை இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா்களின் தொலைபேசி உரையாடல் பிரதிபலித்தது. கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளிடையேயான உறவு தொடா்ச்சியாக வலுப்பெற்று வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கூட்டு போா் பயிற்சிகளை தொடா்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பெருங்கடல்-பசிபிக் பெருங்கடல் பகுதி பாதுகாப்பு தொடா்பான க்வாட் அமைப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →