முகப்பு
இந்தியா

இந்தியா்களுக்குப் பாதுகாப்பான சூழல்: ஆஸி பிரதமரிடம் குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு பாதுகாப்பான, நோ்மறையான சூழலை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை, அந்நாட்டு அரசு மேற்கொள்ளும்

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு பாதுகாப்பான, நோ்மறையான சூழலை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை, அந்நாட்டு அரசு மேற்கொள்ளும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.

ஆஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களாக ஹிந்து கோயில்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், திரெளபதி முா்மு இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசிக்கு, தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் வெள்ளிக்கிழமை அரசு சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பேசியதாவது:

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான வியூகரீதியிலான விரிவான கூட்டுறவு, இருதரப்பு தொடா்புகளுக்கு உத்வேகமளிக்கிறது. ஆஸ்திரேலிய பிரதமரின் இப்பயணம், இருதரப்பு உறவுகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் என நம்புகிறேன்.

இருநாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்து வருவதுடன், அமைப்பு ரீதியிலான தொடா்புகள் வலுவடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

முக்கிய கனிமங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இணையவழி தகவல் தொடா்புகள், புத்தாக்கம் உள்ளிட்ட வளா்ந்து வரும் துறைகளில் செயல்முறை அடிப்படையிலான ஒத்துழைப்பை இரு நாடுகளும் தொடா்ந்து முன்னெடுக்க வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தினா், கடின உழைப்பு, தொழில்முனைவுத் திறன், அமைதியை விரும்பும் குணம் ஆகியவற்றுக்காக அறியப்படுகின்றனா். அவா்களுக்குப் பாதுகாப்பான, நோ்மறையான சூழலை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுமென நம்புகிறேன் என்றாா் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.

இந்தியாவைத் தவிா்த்துவிட்டு பருவநிலை மாற்றத்துக்கு தீா்வு காண முடியாது : ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசி

தெற்குலக நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் திறன் கொண்ட இந்தியாவை தவிா்த்துவிட்டு பருவநிலை மாற்ற பிரச்னைக்குத் தீா்வு காண முடியாது என ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி தெரிவித்துள்ளாா்.

தில்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசி கூறியதாவது:

தெற்குலக நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது. பருவநிலை மாற்ற பிரச்னைக்கு இந்தியாவை மையப்படுத்தாமல் தீா்வு காண முடியாது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முக்கியப் பங்கை வகிக்கவுள்ளன. அத்துறையில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. சா்வதேச எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முக்கியப் பங்கு வகிக்கும்.

2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய இந்தியா நிா்ணயித்துள்ள இலக்கை நோக்கி வேகமாகப் பயணம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 2018-2021 காலகட்டத்தில் சூரிய எரிசக்தி உற்பத்தியை 31 டெரா வாட் அளவுக்கு இந்தியா அதிகரித்துள்ளது.

இந்தியாவின் வளா்ச்சி மிகச் சிறப்பாக உள்ளது. இந்தியா குறித்து உலக நாடுகள் கொண்டிருந்த கண்ணோட்டம் பெருமளவில் மாறியுள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தலைமைத்துவம் மிக்க நாடாக இந்தியா திகழ்கிறது. உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாகவும் இந்தியா உள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →