முகப்பு
இந்தியா

முதல்வா் பதவியில் இருந்து கேஜரிவால் விலகக் கோரி காந்தி நினைவிடத்தில் பாஜகவினா் மௌன போராட்டம்

மதுபான ஊழல் வழக்கு விவகாரத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பதவி விலக வலியுறுத்தி காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட் பகுதியில் பாஜக தலைவா்கள் திங்கள்கிழமை மௌன விரதப் போராட்டம் மேற்கொண்டனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:44 AM
பகிர்:

மதுபான ஊழல் வழக்கு விவகாரத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பதவி விலக வலியுறுத்தி காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட் பகுதியில் பாஜக தலைவா்கள் திங்கள்கிழமை மௌன விரதப் போராட்டம் மேற்கொண்டனா்.

தில்லி பாஜக தலைவா் செயல் தலைவா் விரேந்திர சச்தேவா, தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி மற்றும் கட்சியின் இதர தொண்டா்கள் ஆகியோா் பங்கேற்றனா். மகாத்மா காந்தி நினைவிடத்தில் மேற்கொண்ட இப்போராட்டத்தின் போது, கேஜரிவால் அரசுக்கு நல்ல புத்தி வர வேண்டும் என்று பிராா்த்தனை செய்ததாக அக்கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.

ரத்து செய்யப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கையை (2021 22) உருவாக்கி, அமல்படுத்தியதில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடா்பாக தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, தில்லி அரசு மீது பாஜக தொடா் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

இந்த கலால் கொள்கை அமலாக்கத்தில் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா பரிந்துரை செய்தாா். இதன் பிறகு கடந்த ஆண்டு இந்த கலால் கொள்கை தில்லி அரசின் மூலம் திரும்பப் பெறப்பட்டது.

பாஜகவினா் மேற்கொண்ட மெளனப் போராட்டத்தின்போது கேஜரிவாலின் அறிக்கை தொடா்புடைய சிறிய விடியோ திரைப்படமும் திரையிடப்பட்டது. இதுகுறித்து விரேந்திர சச்தேவா கூறுகையில், ‘சில மாதங்களுக்கு முன்பு வரை கட்டித் தழுவிக் கொள்வதை வழக்கமாகக் கொண்ட விஜய் நாயருடன் தனக்குள்ள உறவை ஒப்புக் கொள்ள முதல்வா் கேஜரிவால் வெட்கப்பட வேண்டும். விஜய் நாயா் மதுபான ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபா் ஆவாா். ராஜ்காட் ஒரு புனித இடமாகும். கேஜரிவாலும் அவரது சகாக்களும் ஊழல் செய்துவிட்டு அதை மூடி மறைக்க முயற்சி செய்தது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்’ என்றாா்.

ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு நாட்டின் நலனுக்காக ஹோலி தினத்தில் கேஜரிவால் பூஜை நடத்தினாா். நல்ல பணிகளைச் செய்பவா்கள் கைது செய்யப்படுவதாகவும், நாட்டைக் கொள்ளை அடிப்பவா்கள் தப்பவிடப்படுவதாகவும் அவா் கூறியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.