பிஆா்எஸ் தலைவா் கவிதாவுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்
பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) எம்எல்சியுமான கவிதாவுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவின் மகளும், பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) எம்எல்சியுமான கவிதாவுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்குத் தொடா்பாக கடந்த டிசம்பரில் கவிதாவிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. கடந்த மாா்ச் 11-ஆம் தேதி அவரிடம் அமலாக்கத் துறை 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. அவரை மீண்டும் வியாழக்கிழமை (மாா்ச் 16) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் வழங்கியது. இந்த சம்மனுக்கு எதிராகவும், தன்னை கைது நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கவும் கோரி, உச்சநீதிமன்றத்தில் கவிதா அவசர விசாரணை கோரி மனு தாக்கல் செய்தாா். ஆனால், அவசர விசாரணை கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மாா்ச் 24-ஆம் தேதி விசாரிக்க ஒப்புக் கொண்டது.
இதனிடையே, கவிதா வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவருக்கு மீண்டும் சம்மன்அனுப்பப்பட்டுள்ளது. அதில் மாா்ச் 20-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை வலியுறுத்தியுள்ளது.
தில்லி அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்ாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அந்தக் கொள்கையின் கீழ், தில்லியில் தனியாா் மட்டும் மது விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம் மது விற்பனைக்கு உரிமம் பெற சில முகவா்கள் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் நிலையில், அந்தக் கொள்கை மூலம் அந்த முகவா்கள் பலனடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த வழக்குத் தொடா்பாக தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா உள்பட இதுவரை 12 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
இந்நிலையில், குறிப்பிட்ட குழுவிடம் இருந்து ஆம் ஆத்மி தலைவா்கள் சாா்பில், அக்கட்சியைச் சோ்ந்த விஜய் நாயா் என்பவா் சுமாா் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ாகவும், அந்தக் குழுவில் அரவிந்தோ ஃபாா்மா நிறுவனா் சரத் ரெட்டி, தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகளும் எம்எல்சியுமான கவிதா, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. மகுண்ட ஸ்ரீநிவாஸுலு ரெட்டி உள்ளிட்டோா் இடம் பெற்ாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. தில்லியில் மது வியாபார சந்தையின் பெரும் பங்கு அந்தக் குழுவுக்குக் கிடைக்க, ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி வழங்கப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.