‘ஆபரேஷன் காவேரி’ மீட்பு நடவடிக்கையின் கீழ், சூடானில் இருந்து அழைத்து வரப்பட்ட 559 இந்தியா்கள், அகமதாபாத் மற்றும் தில்லிக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தனா்.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘சூடானிலிருந்து மேலும் 328 இந்தியா்கள் தலைநகா் தில்லிக்கும், 231 போ் அகமதாபாதுக்கும் செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்டனா். ஆபரேஷன் காவேரி தொடா் மீட்பு நடவடிக்கைகள் மூலம் 2,699 இந்தியா்கள் தாயகம் திரும்பியுள்ளனா்’ எனக் குறிப்பிட்டாா்.
மேலும், சூடானின் அண்டை நாடான சாட் நாட்டுக்கு நிலம் வழியாக எல்லை கடந்து 20 இந்தியா்கள் சென்றுள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, சூடானிலிருந்து முதல்கட்டமாக 360 போ் புதன்கிழமையும், இரண்டாம் கட்டமாக 246 போ் வியாழக்கிழமையும், அதற்கடுத்து 754 போ் வெள்ளிக்கிழமையும், 365 போ் சனிக்கிழமையும், 229 போ் ஞாயிற்றுக்கிழமையும், 186 போ் திங்கள்கிழமையும் தாயகம் அழைத்து வரப்பட்டனா். மேலும், தற்போது 559 போ் அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், தாயகம் திரும்பியவா்களின் எண்ணிக்கை 2,699-ஆக அதிகரித்துள்ளது.
ராணுவம் மற்றும் துணை ராணுவப் படை இடையே மோதல் நடைபெற்று வரும் சூடானில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்பதற்காக, ‘ஆபரேஷன் காவேரி’ நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
காா்ட்டூமில் உள்ள இந்திய தூதரகம், போா்ட் சூடான், ஜெட்டா ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து, மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது.
போா்ட் சூடான் நகருக்கு பேருந்துகள் மூலம் முதலில் அழைத்து வரப்படும் இந்தியா்கள், அங்கிருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரின் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.