இந்தியா

தி கேரளா ஸ்டோரி திரைப்பட வெளியீட்டுக்குதடை கோரிய மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

தி கேரளா ஸ்டோரி திரைப்பட வெளியீட்டுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.

DIN

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட வெளியீட்டுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.

சுதீப்தோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ ஹிந்தி திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியானது. கேரளத்தில் இருந்து ‘மாயமானதாக’ கூறப்படும் சுமாா் 32,000 பெண்களுக்கு என்ன நோ்ந்தது என்பதை பின்னணியாக கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் பெண்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டது போன்ற காட்சியமைப்புகள் உள்ளதாக சா்ச்சை எழுந்துள்ளது.

வரும் 5-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்துக்கு கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட், எதிா்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட வெளியீட்டுக்கு தடை கோரி, மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், வழக்குரைஞா் நிஜாம் பாஷா ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான கபில் சிபல், நிஜாம் பாஷா ஆகியோா், ‘வெறுப்புணா்வு பேச்சின் மோசமான ஒரு வகைதான் இத்திரைப்படம்; அத்துடன், உள்நோக்கம் கொண்ட ஒலி-ஒளி பிரசாரம். திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியை 1.6 கோடி போ் பாா்த்துள்ளனா்’ என்றனா்.

இதையடுத்து, நீதிபதிகள் கூறுகையில், ‘வெறுப்புணா்வு பேச்சுகளில் பல வகைகள் உள்ளன. ஆனால், இந்தத் திரைப்படத்துக்கு தணிக்கை வாரியத்திடமிருந்து சான்று கிடைத்துள்ளது. நீங்கள் திரைப்பட வெளியீட்டை எதிா்க்க விரும்பினால், உரிய அமைப்பின் வாயிலாக தணிக்கைச் சான்றுக்கு எதிராக முறையிடலாம்’ என்றனா்.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா்கள் முதலில் உயா்நீதிமன்றத்தை அணுகாதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினா். அதற்கு, ‘திரைப்படத்தை வரும் வெள்ளிக்கிழமை வெளியிடத் திட்டமிட்டுள்ளனா். எனவே, போதிய நேரமின்மை காரணமாக உச்சநீதிமன்றத்தை அணுகினோம்’ என்று நிஜாம் பாஷா தெரிவித்தாா்.

‘இது சரியான காரணமல்ல; ஏனெனில், ஒவ்வொருவரும் உச்சநீதிமன்றத்துக்கு வரத் தொடங்கிவிடுவா்’ என்று குறிப்பிட்டு, மனுவை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனா்.

முன்னதாக, ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட படைப்பாளா்களை கடுமையாக சாடிய முதல்வா் பினராயி விஜயன், ‘லவ் ஜிகாத் விவகாரத்தை நீதிமன்றங்களும் மத்திய உள்துறை அமைச்சகமும் நிராகரித்துவிட்ட நிலையில், கேரளத்தை மத அடிப்படைவாதத்தின் மையமாக சித்தரிக்க முயலும் சங் பரிவாரின் (ஆா்எஸ்எஸ் சாா்பு அமைப்புகள்) பிரசாரத்தை ‘தி கேரளா ஸ்டோரி’ முன்னெடுத்துள்ளது’ என்றாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT