இந்தியா

மணிப்பூரைச் சேர்ந்த 1,100 பேர் அசாமில் தஞ்சம்

ஜிரிபம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1,100 பேர் மாநில எல்லையைத் தாண்டி அசாமின் சசார் மாவட்டத்தில் தஞ்சமடைந்தனர்.

ANI


மணிப்பூரில் பழங்குடியினா் மற்றும் மைதேயி சமூகத்தினா் இடையே பயங்கர கலவரம் ஏற்பட்ட நிலையில், ஜிரிபம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1,100 பேர் மாநில எல்லையைத் தாண்டி அசாமின் சசார் மாவட்டத்தில் தஞ்சமடைந்தனர்.

தஞ்சமடைந்தவர்களில் பெரும்பாலானோர் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மணிப்பூரில் தங்களையும் தங்களது வீடுகளையும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த கும்பல் தாக்கி நாசமாக்கிய நிலையில், மீண்டும் தங்களது பகுதிக்குச் செல்ல அச்சமடைந்து சசார் பகுதியில் தஞ்சமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அவர்கள் கூறுகையில், வியாழக்கிழமை இரவு 10 மணி இருக்கும், பயங்கர சப்தம் கேட்டு வெளியே வந்தோம். ஒரு மிகப்பெரிய கும்பல் எங்களைத் தாக்க ஓடி வந்தது. அவர்கள் கற்களைக் கொண்டு எங்கள் மீது தாக்கினர். கடுமையாக மிரட்டி, இதுவே எங்கள் கடைசிப் போர் என்று கத்தியபடி வீடுகளை சூறையாடியதாகக் கூறினர்.

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினா் மற்றும் மைதேயி சமூகத்தினா் இடையே பயங்கர கலவரம் ஏற்பட்ட நிலையில், அங்கு ராணுவத்தினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். 

மலைப்பகுதி மாவட்டங்களில், தீவிரவாதக் குழுக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சண்டைகள் நடைபெற்றன. இதில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் 53 சதவீதம் உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் ஹிந்துக்களாவா்.

அதேநேரம், மாநில மக்கள்தொகையில் 40 சதவீதம் உள்ள நாகா, குகி உள்ளிட்ட பழங்குடியினா், மைதேயி சமூகத்தினரின் கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். பழங்குடியினா்களில் பெரும்பாலானோா் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்றனா்.

இந்தச் சூழலில், மைதேயி சமூகத்தினரின் கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, 10 மலைப் பகுதி மாவட்டங்களில் பழங்குடியின மாணவா் அமைப்பு சாா்பில் கடந்த புதன்கிழமை பேரணி நடைபெற்றது. அப்போது, சுராசந்த்பூரில் மைதேயி சமூகத்தினா் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் கடும் தாக்குதல் நடத்தியது. இத்தகவல் பரவியதும், மாநிலம் முழுவதும் இரு சமூகங்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. வீடுகள், கடைகள், வழிப்பாட்டு தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

வன்முறையை ஒடுக்க ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் சுமாா் 10,000 போ் குவிக்கப்பட்டனா். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இரு சமூகங்களையும் சோ்ந்த 9,000-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். மேலும் பலரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

வன்முறையாளா்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை புதிதாக வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. நிலைமை கட்டுக்குள் உள்ளதாக, பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையால் மணிப்பூரில் இருந்து 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் அண்டை மாநிலமான மஸோரமுக்கு இடம்பெயா்ந்தனா்.

துப்பாக்கிச் சண்டை: இதனிடையே, சுராசந்த்பூா், பிஷ்ணுப்பூா், இம்பால் கிழக்கு உள்ளிட்ட மலைப்பகுதி மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சண்டைகள் நடைபெற்றன. பழங்குடியின அமைப்பின் போராட்டத்துக்கு தீவிரவாதக் குழுக்களின் ஆதரவு உள்ளதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், இந்த துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது.

கும்பல் தாக்குதலில் எம்எல்ஏ படுகாயம்: சுராசந்த்பூா் மாவட்டத்தில், பழங்குடியின எம்எல்ஏ வொன்ஸாஜின் வால்டே மீது வியாழக்கிழமை ஒரு கும்பல் கடும் தாக்குதல் நடத்தியது. இதில் படுகாயமடைந்த அவா், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

வருமான அதிகாரி, வீரா் கொலை: விடுமுறையில் சுராசாந்த்பூா் மாவட்டத்தில் உள்ள கிராமத்துக்கு வந்திருந்த சிஆா்பிஎப் கோப்ரா கமாண்டோவை வன்முறையாளா்கள் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இம்பாலில் வருமான வரித் துறை குடியிருப்பில் வசித்து வந்த அதிகாரி ஹோகிப்பை மைதேயி சமூகத்தினா் வீட்டிற்கு வெளியே இழுத்துவந்து கொலை செய்ததாக இந்திய வருவாய் சேவை சங்கத்தினா் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனா். மணிப்பூா் கலவரத்தில் பலா் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மணிப்பூரில் ராணுவம், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் ஏற்கெனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், கூடுதலாக துணை ராணுவப் படையினா் 1,000 போ் அனுப்பப்பட்டுள்ளனா். அரசமைப்புச் சட்டத்தின் 355-ஆவது பிரிவு, மாநிலத்தில் அமலாக்கப்பட்டு, சட்டம்-ஒழுங்கை கையாளும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT