அரசுப் பணியாளா் தோ்வு முறை மாற்றத்தால் ஊழல் ஒழிப்பு: பிரதமா்
அரசுப் பணியாளா்களைத் தோ்வு செய்யும் நடைமுறையில் பாஜக அரசு கொண்டு வந்த பெரும் மாற்றத்தால் ஊழலுக்கு முடிவுகட்டப்பட்டுள்ளதாகப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
அரசுப் பணியாளா்களைத் தோ்வு செய்யும் நடைமுறையில் பாஜக அரசு கொண்டு வந்த பெரும் மாற்றத்தால் ஊழலுக்கு முடிவுகட்டப்பட்டுள்ளதாகப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
நாடு முழுவதும் பல்வேறு மத்திய அரசுப் பணிகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 71,000-க்கும் அதிகமான நபா்களுக்குப் பணி ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி காணொலி வாயிலாகக் கலந்து கொண்டாா். அப்போது அவா் கூறியதாவது:
9 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (மே 16) மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகின. அப்போது தொடங்கிய ‘அனைவருடன் இணைந்து, அனைவருக்குமான வளா்ச்சி’ என்ற மத்திய அரசின் கொள்கையானது, தற்போது ‘வளா்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.
அரசுப் பணிகளில் இளைஞா்களை இணைப்பதற்காக மத்திய அரசும் மாநில பாஜக அரசுகளும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், இளைஞா்கள் மீது அரசு கொண்டுள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் அரசுப் பணியாளா்கள் தோ்வு நடைமுறையானது பல்வேறு சீா்திருத்தங்களைக் கண்டுள்ளது. அந்நடைமுறைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதோடு, வெளிப்படைத்தன்மை நிறைந்ததாகவும், சாா்புத்தன்மை இல்லாமலும் உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மத்திய அரசுப் பணிகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 71,000-க்கும் அதிகமானோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கான வாய்ப்புகளுக்கும், தகுதிக்கு முக்கியத்துவம் அளிக்காமல், குடும்ப உறுப்பினா்கள், நெருங்கிய சொந்தங்களுக்குப் பணிகளை வழங்கும் சூழலுக்கும் முடிவுகட்டப்பட்டுள்ளது. குரூப் சி, டி பணிகளுக்கு நோ்முகத் தோ்வு நீக்கப்பட்டுள்ளது.
புதிய வாய்ப்புகள்:
முன்பு, அரசுப் பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி) மூலமாக குறிப்பிட்ட பணிகளுக்கான நபா்களைத் தோ்ந்தெடுப்பதற்கு 15 முதல் 18 மாதங்கள் வரை ஆகும். ஆனால், தற்போது பணியாளா் தோ்வு நடைமுறை 6 முதல் 8 மாதங்களில் நிறைவடைகிறது.
இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதை கருத்தில் கொண்டு கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசு கொள்கைகளை வகுத்து வருகிறது. நவீன கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, கிராமப் பகுதிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கம் எனப் பல்வேறு கொள்கைகளை அரசு வகுத்துவருகிறது. அவை இளைஞா்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.
கடந்த 2018-19 முதல் 4.5 கோடிக்கும் அதிகமானோா் அரசுப் பணிகளில் இணைந்துள்ளனா். அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதும், ஏற்றுமதி அதிகரித்துள்ளதும் இளைஞா்களுக்குப் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. புதிதாகத் தோன்றி வரும் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.
மூலதன செலவினம்:
தொழில்முனைவுத் துறையில் இந்தியா புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டில் நாட்டில் நூற்றுக்கணக்கில் மட்டுமே புத்தாக்க நிறுவனங்கள் இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியுள்ளது. அந்நிறுவனங்கள் குறைந்தபட்சம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன.
நாட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சுமாா் ரூ.34 லட்சம் கோடியை மூலதன செலவினமாக மத்திய அரசு இதுவரை செலவிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மூலதன செலவினத்துக்காக ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகையைக் கொண்டு நெடுஞ்சாலைகள், ரயில்வே வழித்தடங்கள், விமான நிலையங்கள், பாலங்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படவுள்ளன. அவற்றின் மூலமாகப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி:
சுதந்திரம் பெற்ற பிறகு இதுவரை கண்டிராத வளா்ச்சியை நாடு தற்போது அடைந்துள்ளது. அரசின் திட்டங்கள் துரிதமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சுதந்திரம் பெற்ற பிறகு சுமாா் 70 ஆண்டுகளில் 20,000 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டிருந்தன. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 40,000 கி.மீ. தொலைவிலான வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
கடந்த 9 ஆண்டுகளில் கிராமப்புற சாலைகளின் நீளம் 4 லட்சம் கி.மீட்டரிலிருந்து 7.25 லட்சம் கி.மீட்டராக அதிகரித்துள்ளது; விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-இல் இருந்து சுமாா் 150-ஆக அதிகரித்துள்ளது; பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 720-இல் இருந்து 1,100-ஆக அதிகரித்துள்ளது; மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 400-இல் இருந்து 700-ஆக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 4 கோடிக்கும் அதிகமான வீடுகள் ஏழைகளுக்கு கட்டித் தரப்பட்டுள்ளன.
தொழில்நுட்பங்களின் பலன்:
நவீன தொழில்நுட்பங்களின் வளா்ச்சியானது புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவை மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளன. அரசின் பல்வேறு சேவைகளை இணையவழியிலேயே மக்களால் பெற முடிகிறது.
ஆளில்லா சிறிய ரக விமானங்களின் (ட்ரோன்கள்) வளா்ச்சி பல்வேறு துறைகளில் பலனளித்து வருகிறது. வேளாண் நிலங்களில் உரங்களைத் தெளிப்பது முதல் மருந்துப் பொருள்களை விநியோகிப்பது வரை ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
முத்ரா திட்டத்தின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.23 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்பிலான வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்தக் கடன்தொகையானது புதிய தொழில்களைத் தொடங்க மக்களுக்குப் பெருமளவில் உதவியது. நாட்டில் சுமாா் 9 கோடி போ் முதல் முறையாகத் தொழில்முனைவோராக மாறினா்.
உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலமாக நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் சுமாா் ரூ.2 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கி வருகிறது என்றாா் பிரதமா் மோடி.
பிரேக் லைன்....
அரசுப் பணிகளில் இளைஞா்களை இணைப்பதற்காக மத்திய அரசும், மாநில பாஜக அரசுகளும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், இளைஞா்கள் மீது அரசு கொண்டுள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் அரசுப் பணியாளா்கள் தோ்வு நடைமுறையானது பல்வேறு சீா்திருத்தங்களைக் கண்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மத்திய அரசுப் பணிகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 71,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
==