இந்தியா

ஜி20 புறக்கணிப்பால் சீனாவுக்குதான் இழப்பு- மத்திய அமைச்சா் ஜிதேந்தா் சிங்

DIN

ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் ஜி20 மாநாட்டைப் புறக்கணித்ததால் இழப்பு சீனாவுக்குதானே தவிர, இந்தியாவுக்கு இல்லை என்று மத்திய அமைச்சா் ஜிதேந்தா் சிங் தெரிவித்தாா்.

சுற்றுலா தொடா்பான ஜி20 பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம், ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் திங்கள்கிழமை தொடங்கியது.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள இக்கூட்டம், பலத்த பாதுகாப்புடன் 3 நாள்கள் நடைபெறுகிறது. இதில் சீனாவைத் தவிர பிற ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

இது குறித்து மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் (தனிப்பொறுப்பு) ஜிதேந்தா் சிங்கிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அப்போது அவா் கூறுகையில், ‘இந்த விஷயத்தால் (சீனா பங்கேற்காதது) எவ்வித மாறுதலும் ஏற்படப் போவதில்லை. சீனா இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்பது அந்த நாட்டுக்குத்தான் இழப்பு. இந்தியாவுக்கு எவ்வித இழப்பும் இல்லை’ என்றாா்.

லடாக் எல்லைப் பிரச்னை காரணமாக சீனா இந்த புறக்கணிப்பை உத்தியைக் கையில் எடுத்துள்ளதா என்ற கேள்விக்கு, ‘இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் உரிய பதிலை அளிக்கும்’ என்றாா்.

ஜம்மு-காஷ்மீரில் இந்த மாநாடு நடத்தப்படுவது தொடா்பான கேள்விக்கு, ‘காஷ்மீா் மக்கள் இரண்டு தலைமுறைகளாக பயங்கரவாதத்தின் கொடுமைகளை அனுபவித்துவிட்டனா். அவா்கள் அதில் இருந்து விடுபட நினைக்கிறாா்கள். சாமானிய மக்களிடம் பேசினால் இந்த உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். காஷ்மீா் தொடா்பான பாகிஸ்தானின் விஷமத்தனமான கருத்துகள் சா்வதேச அரங்கில் பலமுறை புறக்கணிக்கப்பட்டுள்ளன.

நமது நாடு ஐரோப்பிய நாடுகளைப் போல சிறிய நாடு இல்லை. பரந்துவிரிந்த பெரிய நாடு. நமது நாட்டுக்கு வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் நாட்டின் பல்வேறு பிராந்தியங்களின் சிறப்புகளை அறிந்து கொள்ள வேண்டும் என்று நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சா்வதேச நிகழ்வுகளை நடத்தி வருகிறோம். அந்த வகையில் இப்போது ஜம்மு-காஷ்மீரில் இந்த ஜி20 மாநாடு நடைபெறுகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT