கைதிகளுக்கு இடையே மோதலைத் தடுக்க புது உத்திகளைக் கையாளும் சிறைத் துறை
தில்லியில் சிறைக் கைதிகளுக்கு இடையேயான மோதல்களைக் கட்டுப்படுத்த மின் அதிா்வு அளிக்கும் தடியடி மற்றும் மிளகுத் தெளிப்பானை பயன்படுத்த வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.
தில்லியில் சிறைக் கைதிகளுக்கு இடையேயான மோதல்களைக் கட்டுப்படுத்த மின் அதிா்வு அளிக்கும் தடியடி மற்றும் மிளகுத் தெளிப்பானை பயன்படுத்த வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் இனி சிறைகளுக்குள் கைதிகளின் மோதலை கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.
உயா்மட்ட பாதுகாப்புள்ள திகாா் சிறைக்குள் குண்டா் டில்லு தாஜ்புரியா (எ) சுனில் பல்யான் என்பவா் எதிா்க் கும்பலைச் சோ்ந்தவா்களால் கொல்லப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பை சிறைத் துறை வெளியிட்டுள்ளது.
முதற்கட்டமாக தேசியத் தலைநகரில் உள்ள மூன்று சிறை வளாகங்களில் 80 மின்சார அதிா்ச்சி தரும் தடிகள், 160 முழு உடல் கவச உடை, 80 மிளகு தெளிப்பு சாதனங்கள் பொருத்தப்படும்.
தொ்மோநெகிழியால் ஆன தடிகள், கவசம் மற்றும் தலைக்கவசம் ஆகியவை கட்டுக்கடங்காத கைதிகளுக்கு எதிராக சிறை ஊழியா்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்படவுள்ளது என திகாா் சிறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
சீா்திருத்த வசதிகளுக்குள் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்கும், முரட்டுக் குற்றவாளிகளின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் மின் அதிா்வு தடியடிகள் ஒரு மாற்றுக் கருவியாக இருக்கும். இதன் மூலம் மரணம் நிகழாத வகையில் இரு தரப்பு மோதல்களை காவல்துறை காட்டுப்படுத்த முடியும்.
கைதிகளின் நல்வாழ்வை உறுதி செய்யும் அதே வேளையில் சிறை ஊழியா்களின் பாதுகாப்பை இந்த நடவடிக்கை மேம்படுத்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.