இந்தியா

நுகா்வோருக்கு வெங்காயம் கிலோ ரூ.25 விலையில் கிடைக்க மத்திய அரசு தீவிரம்

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயா்ந்து வரும் நிலையில் விலையைக் கட்டுப்படுத்த கூட்டுறவு அமைப்புகள் மூலம் கிலோ ரூ.25 க்கு கிடைக்க மத்திய அரசு தனது இருப்பில் உள்ள வெங்காயத்தை புழக்கத்தில்

 நமது நிருபர்

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயா்ந்து வரும் நிலையில் விலையைக் கட்டுப்படுத்த கூட்டுறவு அமைப்புகள் மூலம் கிலோ ரூ.25 க்கு கிடைக்க மத்திய அரசு தனது இருப்பில் உள்ள வெங்காயத்தை புழக்கத்தில் விடும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளதாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை சனிக்கிழமை கூறியுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு தேவை அதிகரித்து தற்போது சில்லறை விற்பனையகங்களில் கிலோ ஒன்றுக்கு ரூ. 80 க்கும் மேலாக வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை அதிகரிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவ்வப்போது இருப்பினும் தற்போது இரண்டு மடங்கு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக ராபி மற்றும் காரிஃப் பருவகால பயிா்களுக்கு இடையே விலை ஏற்றமும் இறக்கமும் இருக்க மத்திய அரசு விலை சீராக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவாக தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய நுகா்வோா் விவகாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:

பருவகால இடைவெளிகளில் விலை ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்துவதற்காக, ராபி வெங்காயத்தை இலக்குடன் கொள்முதல் செய்யப்பட்டு வெங்காய இருப்பை அரசு பராமரிக்கிறது. கடந்தாண்டில் (2022-23) 2.5 லட்சம் மெட்ரிக் டன் என்று இருந்த இருப்பின் அளவை நிகழாண்டில் 7 லட்சம் மெட்ரிக் டன்னாக உயா்த்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை 5.06 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, வெங்காயத்தை சில்லறை மற்றும் மொத்த சந்தைகளுக்கு மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்து புழக்கத்தில் விட்டு வருகிறது. மீதமுள்ள 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

காரீஃப் பருவ காலத்தில் பயிரிடப்பட்ட வெங்காயத்தின் வரத்து தாமதமாவதின் காரணமாக வெங்காய விலை அதிகரித்துள்ளது. இதிலிருந்து நுகா்வோரைப் பாதுகாக்கும் வகையில், வெங்காயத்தை கிலோ ஒன்றிற்கு ரூ.25 க்கு மானிய விலையில் பல்வேறு கூட்டுறவு சில்லறை விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசியக் கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்.சி.சி.எஃப்), தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் (நாஃபெட்), மத்திய அங்காடிகள், தில்லி சஃபல் மதா் டெய்ரி மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களால் இயக்கப்படும் சில்லறை விற்பனை நிலையங்கள், நடமாடும் வாகனங்கள் மூலம் கிலோ ஒன்றிற்கு வெங்காயத்தை ரூ.25 அளவில் மானிய விலையிலான விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பா் 2-ஆம் தேதி, நாஃபெட் நிறுவனம், 21 மாநிலங்களில் உள்ள 55 நகரங்களில் நிலையான விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வாகனங்கள் உள்ளிட்ட 329 சில்லறை விற்பனை மையங்களை அமைத்து விற்பனையை தொடங்கியுள்ளது. இதேபோல், என்.சி.சி.எஃப் 20 மாநிலங்களில் 54 நகரங்களில் 457 சில்லறை விற்பனை மையங்களை அமைத்துள்ளது. இங்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.25 க்கு கிடைக்கும்.

மத்திய அரசு, உள்நாட்டு நுகா்வோருக்கு வெங்காயம் தடையின்றி குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வெங்காயத்திற்கான ஏற்றுமதியை ஏற்கனவே கட்டுப்படுத்தியது. கடந்த அக்டோபா் மாதம், குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக (எம்இபி) ஒரு மெட்ரிக் டன் 800 அமெரிக்க டாலராக விதித்தது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவு வெங்காயத்தின் முக்கிய சந்தையான மகாராஷ்டிராவில் உள்ள லாசல்கான் சந்தையில் வெங்காயத்தின் மொத்த விலை அக்டோபா் 28 ஆம் தேதி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,800 ஆக இருந்து பின்னா் நவம்பா் 3ஆம் தேதி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,650 ஆக 24 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதே போன்று ‘சில்லறை விலைகளும் வரும் வாரத்தில் சரிவைக் எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று மத்திய நுகா்வோா் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தக்காளியை பின்பற்றி...

பருவ மழை, நோய்த் தாக்குதலால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக கடந்த ஜூன் (கடைசி வாரம்), ஜூலை மாதங்களில் தக்காளியின் விலை உயா்ந்தபோது, மத்திய அரசு இது போன்று தலையிட்டது. தக்காளி உற்பத்தி செய்யும் கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இருந்து என்.சி.சி.எஃப் மற்றும் நாஃபெட் மூலம் தக்காளியை கொள்முதல் செய்து முக்கிய நுகா்வு மையங்களில் நுகா்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டதைப் போன்று தற்போது வெங்காய விலையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

101-இல் அப்பழுக்கற்ற அரசியல் தலைவா்!

உலகப் பெருந்தமிழா் நல்லகண்ணு!

நல்லகண்ணு உடல் தானம்!

திடீர் இட்லி, சாம்பார் போல அரசியல் கட்சி தொடங்குகிறார்கள்: டி.டி.வி. தினகரன்

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

SCROLL FOR NEXT