சத்தீஸ்கரை விட்டு காங்கிரஸ் அரசு வெளியேறும் நேரம் நெருங்கிவிட்டது : பிரதமர் மோடி!
முங்கேலி பேரணியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் சத்தீஸ்கரை விட்டு வெளியேரப்போகும் நேரம் நெருங்கிவிட்டது எனக் கூறியுள்ளார்.
சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் நடைபெற்றப் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் அரசு சத்தீஸ்கரை விட்டு வெளியேறும் காலம் நெருங்கிவிட்டது எனக் கூறினார்.
மேலும் முதல்வர் பூபேஷ் பகேல் மற்றும் துணை முதல்வர் டிஎஸ் சிங் டியோ ஆகியோருக்கு இடையேயான அதிகாரப்பகிர்வு ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டிய மோடி, தங்களின் மூத்த தலைவர்களை இப்படிக் கைவிடும் காங்கிரஸ், மக்களையும் கண்டிப்பாக கைவிட்டுவிடும் என்றும், கொடுக்கும் எந்த உறுதியையும் நிறைவேற்றாது எனவும் கூறியுள்ளார்.
மேலும் பேசிய மோடி, 'காங்கிரஸ் மோடியை வெறுக்கிறது. எந்த அளவுக்கு என்றால், மோடியின் சாதியினரையும் சேர்த்து வெறுக்கிறது. காங்கிரஸ் கடந்த சில மாதங்களாக, மொத்த இதர பிற்படுத்தப்பட்ட சாதியிரனையும் (OBC) மோடியின் பெயரைக் கொண்டு துஷ்பிரயோகம் செய்கிறது. நீதிமன்றம் அவர்களை மன்னிப்பு கேட்கச் சொல்லியும் அவர்கள் அதை மறுத்துவிட்டனர்.
இதையும் படிக்க : கூட்டு பாலியல் வன்கொடுமை: பெண் உள்பட 5 பேர் கைது!
இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் மீது காங்கிரஸ் எவ்வளவு வெறுப்பைக் கொண்டுள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. அம்பேத்கரை அவமானப்படுத்தியதும் காங்கிரஸ் தான். பாபாசாகிப்பின் அரசியலுக்கு முடிவுகட்ட சதி செய்ததும் காங்கிரஸ் கட்சிதான். ஓட்டுக்காக காங்கிரஸ் என்ன வேண்டுமானால் செய்யத் தயாராக இருக்கிறார்கள்' எனக்கூறினார் மோடி
மேலும் சத்தீஸ்கரில் உள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 7 ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெற்றது. மீதத் தொகுதிகளுக்கு வாக்கெடுப்பு வரும் நவம்பர் 17 அன்று நடத்தப்படவுள்ளது.