இந்தியா

கேரளத்தில் தொடரும் கனமழை: திருவனந்தபுரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை

DIN

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தொடர்ந்து  பெய்து வரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், கனமழை காரணமாக திருவனந்தபுரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் புதன்கிழமை தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால், மாநிலத்தின் உள்ள பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து அபாய கட்டத்தை எட்டியுள்ளது.

கனமழைக்கு அக்டோபர் 1 ஆம் தேதி வாமனபுரம் ஆற்றில் ஒருவர் காணாமல் போனார், அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மாநிலத்தில் ஐந்து நாள்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளத்தில்  ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்யும். கனமழை காரணமாக, திருவனந்தபுரத்திற்கு மிக கனமழையைக் குறிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வரும் நாள்களில் தீவிர வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அக்டோபர் 5 ஆம் தேதி வரை மாநிலத்தில் பல இடங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.

கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. அடுத்த 4 நாள்களுக்கு மாநிலம் முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 30 - 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். கேரளம் மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்” என்று  அறிவுறுத்தி உள்ளது.

வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை அடுத்து, திருவனந்தபுரம் மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை (அக்.4) பொறியியல் கல்லூரிகள், கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த உடல் தகுதித் தேர்வையும் ஒத்திவைத்துள்ளது. தேர்வுக்கான புதிய தேதி பின்னர்  அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

கடந்த சில நாட்களாக பெய்த கனமழைக்கு திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை, 23 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது, சுமார் ரூ.43.57 லட்சம் மதிப்பிலான பயிர்கள் நாசமானது. ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் உள்ள சிறிய குக்கிராமமான எடத்துவாவில் பெய்த கனமழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

இதற்கிடையில், திருவனந்தபுரம் நெய்யாற்றில் உள்ள அருவிப்புரம் நிலையத்தில் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியதால், மத்திய நீர் ஆணையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், கரமனா ஆற்றில் உள்ள வெள்ளைக்கடவ் நிலையம், அச்சன்கோவில் ஆற்றில் உள்ள தும்பமன் ரயில் நிலையம் (பத்தனம்திட்டா) மற்றும் மணிமாலா ஆற்றில் உள்ள கல்லுப்பாறை ரயில் நிலையம் (பத்தனம்திட்டா) ஆகிய இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் மழையினால் இதுவரை எந்த இடத்திலும் பெரிய உயிர் சேதம் ஏற்படவில்லை. மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் சோ்க்கை: முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

பசித்தோர்க்கு உணவு

உலகமெங்கும் ஒலிக்கும் தமிழோசை!

தமிழ்நாட்டில் அதிக வெயில் பதிவான இடங்கள்: ஈரோடு முதலிடம்!

சிரி... சிரி...

SCROLL FOR NEXT