உத்தரகண்டில் சிவன் உறைவிடமான ஆதி கைலாஷ் சிகரத்தின் தரிசனத்துடன், பார்வதி குளத்தில் உள்ள சிவன் பார்வதி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.
ஜோலிங்காங்கில் உள்ள பார்வதி குண்ட் கரையில் அமைந்துள்ள சிவன்-பார்வதி கோயிலில் பழங்குடியினரின் பாரம்பரிய உடையை அணிந்து, தலைப்பாகையுடன் உடுக்கை இசைத்து, சங்கு ஊதியும், ஆரத்தி பூஜையில் அவர் பங்கேற்றார்.
பிரதமர் மோடியுடன் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் கலந்துகொண்டார். கோயில் அர்ச்சகர்களான வீரேந்தி குடியால் மற்றும் கோபால் சிங் ஆகியோர் பாரம்பரிய முறைப்படி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும், ஜோலிங்காங்கில் உள்ள ஆதி கைலாஷ் சிகரத்தின் முன் கைகளைக் கட்டிக்கொண்டு சிறிது நேரம் தியானத்திலும் அவர் ஈடுபட்டார்.
அங்கிருந்து எல்லையோர கிராமமான குன்சிக்கு சென்று அங்கு உள்ளூர் மக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுடன் கலந்துரையாடினார். மேலும் உள்ளூர் மக்களால் தயாரிக்கப்படும் கலைப்பொருள்களின் கண்காட்சியில் அவர் கலந்துகொண்டார்.
இதையும் படிக்க: 'குழந்தைத் திருமணங்கள் முடிவுக்கு வர இன்னும் 300 ஆண்டுகள் ஆகும்'
குன்சியிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள பழமையான சிவன் கோயிலான ஜாகேஷ்வர் தலத்திற்கும் அவர் செல்ல உள்ளார். அங்கு தியானம் செய்தபிறகு பிரதமர் மதிய உணவை எடுத்துக்கொள்கிறார்.
அதன்பிறகு பித்தோராகர் திரும்பும் அவர், அங்கு எஸ் எஸ் வால்டியா விளையாட்டு மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு முன்பு ரூ.4,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.