இந்தியா

பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பியது இந்தியா!

போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான உதவிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. 

DIN


புதுதில்லி: போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான உதவிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. 

ஹமாஸ் படையினர் எல்லைத் தாண்டி இஸ்ரேல் மீது கடந்த அக். 7ல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. 

ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது தீவிர வான்வழித் தாக்குதல் மேற்கொண்டு வரும் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலுக்கும் ஆயத்தமாகி வருகிறது. 

மேலும், காஸாவின் அல்-அஹ்லி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த  நிலையில்  தற்போது காஸாவின் அல்-குவாத் மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக சனிக்கிழமை தகவல்கள் வெளியானது. 

இந்த போரில் இதுவரை 1,400க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும், 4,137 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

இந்த சூழ்நிலையில், கடந்த வியாழக்கிழமை பாலஸ்தீன அதிபர் முஹமது அப்பாஸ் உடன் தொலைப்பேசி வாயிலாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீன மக்களுக்கான தேவையான மனிதாபிமான உதவிகளை செய்யவும் தொடர்ந்து தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கும்பொருட்டு போரில் தொடங்கிய 15 -ஆவது நாளில் காஸா- எகிப்து  இடையே உள்ள ஒரே எல்லையான ரஃபா எல்லை சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உணவு, மருந்து பொருள்களுடன் லாரிகள் காஸாவுக்கு சென்றதாக தகவல்கள் வெளியானது. 

இந்த நிலையில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. 

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், பாலஸ்தீன மக்களுக்கான சுமார் 6.5 டன் மருத்துவ உதவிகள் மற்றும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு ஐஏஎப் சி-17 விமானம் எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு புறப்பட்டது. 

இதில், அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருள்கள், கூடாரங்கள், தூங்கும் பைகள், தார்ப்பாய்கள், சுகாதாரப் பொருள்கள், தண்ணீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் போன்ற பிற தேவையான பொருள்கள் அடங்கும் என அரிந்தம் பாக்ஸி  தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

SCROLL FOR NEXT