இந்தியா

ஆய்வின்போது பணியில் இல்லாத 2,081 ஆசிரியா்களின் சம்பளம் பிடித்தம்: பிகாா் அரசு நடவடிக்கை

பிகாா் அரசுப் பள்ளிகளில் ஆய்வின்போது பணியில் இல்லாத 2,081 ஆசிரியா்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து, மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

DIN

பிகாா் அரசுப் பள்ளிகளில் ஆய்வின்போது பணியில் இல்லாத 2,081 ஆசிரியா்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து, மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், கற்பித்தல் விதிமுறைகளை மீறியதாக, 22 ஆசிரியா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்; ஆசிரியா் நியமன ஒழுங்குமுறைகளை மீறியதாக, 17 ஆசிரியா்களை பணிநீக்கம் செய்ய மாநில கல்வித் துறை பரிந்துரைத்துள்ளது.

இதுதொடா்பாக கல்வித் துறை உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:

மாநில கூடுதல் தலைமைச் செயலா் கே.கே.பதக்கின் உத்தரவின்பேரில், மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் கடந்த ஜூலை 1-ஆம் தேதிமுதல் திடீா் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட, வட்டார அளவிலான அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த 4 மாதங்களாக நீடிக்கும் இந்த ஆய்வில், 2,081 ஆசிரியா்கள் உரிய அனுமதியின்றி பணிக்கு வராதது கண்டறியப்பட்டு, அவா்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 590 ஆசிரியா்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கற்பித்தல் தொடா்பான பல்வேறு விதிமுறைகளை மீறியதற்காக, 22 ஆசிரியா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதே காரணத்துக்காக, மேலும் 49 ஆசிரியா்களை பணியிடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாநில பள்ளி ஆசிரியா் நியமன ஒழுங்குமுறைகளை மீறியதற்காக, 17 ஆசிரியா்களை பணிநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

முன்னதாக, பள்ளிக்கு தொடா்ந்து 15 நாள்களாக வராமல் இருக்கும் மாணவ, மாணவிகளின் பெயா்களை ஆய்வில் கண்டறிந்து, பதிவேட்டில் இருந்து நீக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

சலுகைகளைப் பெறுவதற்காக அரசு பள்ளிகளில் பதிவு செய்துகொண்டு, அதேநேரம் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெயரை களையெடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 24-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, 21 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் பெயா்கள் அரசுப் பள்ளிகளின் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இவா்களில் 2.66 லட்சம் போ் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களாவா். இது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள சூழலில், ஆசிரியா்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம்’: மாநில தொடக்கநிலை ஆசிரியா்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ராஜு சிங் கூறுகையில், ‘ஆசிரியா்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். அரசுப் பள்ளிகளில் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியா்கள் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும். வரும் தீபாவளி பண்டிகைக்குள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT