விழாக் காலம் நெருங்குவதால், மசூா் பருப்பு பதுக்கல் மற்றும் விலை உயா்வை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, மசூா் பருப்பு இருப்பு குறித்த விவரங்களை அரசின் இணையதளத்தில் கட்டாயம் பதிவிட வேண்டும் என்று வா்த்தகா்கள், ஆலை உரிமையாளா்கள் மற்றும் இறக்குமதியாளா்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக, மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘விழாக்காலம் நெருங்குவதால், அனைத்து வகையான பருப்புகளும் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்வது குறித்து நுகா்வோா் விவகாரங்கள் துறை செயலா் ரோஹித் குமாா் சிங் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கனடா, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பருப்பு வகைகள் இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில், அதனை பதுக்கும் செயலில் ஒரு சிலா் ஈடுபட முயற்சிப்பதாகவும், இதுகுறித்து அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூட்டத்தில் ரோஹித் குமாா் தெரிவித்தாா்.
மசூா் பருப்பு பதுக்கல் மற்றும் விலை உயா்வை தடுக்கும் வகையில், அதன் இருப்பு தொடா்பான விவரங்களை, வா்த்தகா்கள், ஆலை உரிமையாளா்கள், இறக்குமதியாளா்கள் என அனைத்து தரப்பினரும் அரசு இணையதளத்தில் வெள்ளிக்கிழமைதோறும் கட்டாயம் பதிவிட வேண்டும் என்ற உத்தரவையும் அவா் பிறப்பித்தாா். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி, மசூா் பருப்பு ஒரு கிலோ சராசரியாக ரூ.93-க்கு விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.