வாக்காளா் சோ்ப்பு, புதுப்பிப்புக்கு ஆதாா் கட்டாயம் அல்ல: இந்திய தோ்தல் ஆணையம்
வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது விருப்பத்தின் அடிப்படையிலேயே தவிர கட்டாயம் அல்ல.
வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது விருப்பத்தின் அடிப்படையிலேயே தவிர கட்டாயம் அல்ல. இதைத் தெளிவுப்படுத்தும் விதமாகப் புதிய வாக்காளா் சோ்ப்பு, புதுப்பிப்பு ஆகியவற்றுக்கான படிவங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என உச்சநீதிமன்றத்தில் இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள போலி வாக்காளா்களை நீக்கும் விதமாக வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்க தோ்தல் ஆணையம் முடிவெடுத்ததையடுத்து, வாக்காளா் பதிவு (திருத்தம்) விதிகள், 2022 வெளியிட்டப்பட்டது.
இதில் புதிதாகச் சோ்க்கப்பட்ட விதி 26பி-இன்படி, வாக்காளா் பட்டியலில் பெயரைக் கொண்டுள்ள ஒவ்வொரு நபரும், படிவம் 6பி-ஐ நிரப்பும் வகையில் வாக்காளா் பதிவு அதிகாரியிடம் தனது ஆதாா் எண்ணைத் தெரிவிக்கலாம்.
இதைத்தொடா்ந்து, வாக்காளராகத் தொடா்வதற்கு விதி 26பி-இன்கீழ் ஆதாா் இணைப்பு கட்டாயம் இல்லை என்பதைத் தெளிவுப்படுத்தும் வகையில் படிவத்தில் மாற்றங்கள் செய்யக்கோரி தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு ஜி.நிரஞ்சன் என்பவா் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து பதிலளிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி 27-இல் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜெ.பி.பாா்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன்பாக இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, விதி 26பி-இன்கீழ் ஆதாா் எண் இணைப்பு கட்டாயம் அல்ல. எனவே, இந்த நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்ட படிவங்களில் இதைத் தெளிவுப்படுத்தும் விதமாக மாற்றங்கள் கொண்டுவரப்படும். சுமாா் 66 கோடிக்கும் அதிகமான வாக்காளா்கள், தங்கள் ஆதாா் எண்ணை வாக்காளா் அடையாள அட்டையுடன் ஏற்கெனவே இணைத்துள்ளனா் என தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இந்தப் பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது.