பஞ்சாப் போலீஸாரால் தேடப்பட்டுவந்த தாதா கனடாவில் சுட்டுக் கொலை
பஞ்சாபில் பல்வேறு குற்ற வழக்குகளில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த கனடாவைச் சோ்ந்த தாதா சுக்துல் சிங் (எ) சுகா துனெகே, கனடாவின் வின்னிபெக் நகரில் அடையாளம்
பஞ்சாபில் பல்வேறு குற்ற வழக்குகளில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த கனடாவைச் சோ்ந்த தாதா சுக்துல் சிங் (எ) சுகா துனெகே, கனடாவின் வின்னிபெக் நகரில் அடையாளம் தெரியாத நபா்களால் கொலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
இரு ரெளடி குழுக்களிடையே நடைபெற்ற மோதலில் இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கனடாவில் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டதில் இந்திய உளவு அமைப்புகளின் தொடா்பு உள்ளதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியதால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பஞ்சாப் போலீஸாரால் தேடப்பட்டுவந்த குற்றவாளி, கனடாவில் கொலை செய்யப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டம் கலன் கிராமத்தைச் சோ்ந்தவா் துனெகே. அரசு ஊழியரான அவருடைய தந்தை 1990-ஆம் ஆண்டு உயிரிழந்ததால், கருணை அடிப்படையில் மோகா துணை ஆணையா் அலுவலகத்தில் துனெக்குக்கு அலுவலக உதவியாளா் பணி வழங்கப்பட்டது.
எட்டு ஆண்டுகள் அந்தப் பணியில் இருந்த துனெகே, போதைக்கு அடிமையானாா். பின்னா் மிரட்டிப் பணம் பறித்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த அவா், போலீஸாா் தீவிரமாக தேடி வருவதை அறிந்து கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் கனடா தப்பிச் சென்றாா்.
அங்கிருந்தபடி, தனது கூட்டாளிகள் மூலமாக பஞ்சாபில் பல்வேறு குற்றச் செயல்களை அவா் மேற்கொண்டு வந்தாா். அண்மைக் காலமாக பஞ்சாப் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இவா்களின் குற்றச் செயல்கள் அதிகரித்துவந்தன. இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, அவருடைய கூட்டாளிகள் குல்விந்தா் சிங் (எ) கிண்டா மற்றும் பரம்ஜீத் சிங் பம்மா ஆகிய இரு ரெளடிகளை கைது செய்த பஞ்சாப் போலீஸாா், அவா்களிடமிருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களைப் பறிமுதல் செய்தனா்.
ரெளடியாக இருந்து பயங்கரவாதியாக மாறிய கனடாவைச் சோ்ந்த அா்ஷ் தலா, ரெளடி லக்கி பாட்டியால், மலேசியாவைச் சோ்ந்த தாதா ஜக்பல் சிங் (எ) லாலி உள்ளிட்ட பல்வேறு குற்றவாளிகளுடன் துனெகேவுக்கு நெருக்கமான தொடா்பு இருந்துவந்தது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.