முகப்பு
இந்தியா

இந்தியாவில் 9 மாதத்தில் 146 புலிகள் பலி: தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தகவல்

இந்தியாவில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை 146 புலிகள் இறந்துள்ளதாகவும், இது கடந்த 11 ஆண்டுகளில் மிகவும் அதிகம் என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தரவுகள் தெரிவிக்கின்றன.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:03 AM
கோப்புப்படம்
பகிர்:


புணே: இந்தியாவில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை 146 புலிகள் இறந்துள்ளதாகவும், கடந்த 11 ஆண்டுகளில் இதுவே அதிக எண்ணிக்கையிலான புலிகள் இறப்பு என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. புலிகள் இறப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை.

உலகிலேயே 3,000 புலிகளுடன் மிகப்பெரிய புலிகளைக் கொண்ட நாடான இந்தியாவில், நடப்பு ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை 9 மாதத்தில் 24 புலி குட்டிகள் உள்பட 146 புலிகள் இறந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், புலிகள் அதிகம் உயிரிழந்த மாநிலங்கள் பட்டியலில் மத்தியப் பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. இது புலிகளின் இனப்பெருக்கத் திறனை நேரடியாகப் பாதிக்கும் என தெரிவித்துள்ளது. 

கடந்த 11 ஆண்டுகளில் இதுவே அதிக எண்ணிக்கையிலான புலிகள் இறப்பு எனவும், 2017 ஆம் ஆண்டிலிருந்து அதிக எண்ணிக்கையிலான புலி இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகள் படி, கடந்த 9 மாதத்தில்  மத்தியப் பிரதேசத்தில் (34), அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் (32), உத்தரகாண்டில் 17, அசாமில் 11, கர்நாடகத்தில் 9, ராஜஸ்தானில் 5 புலிகளும் இறந்துள்ளன. இதுதவிர, இந்த காலகட்டத்தில் நாட்டிலுள்ள பல்வேறு புலிகள் காப்பகங்களில் 70 இறப்புகள் பதிவாகியுள்ளன. 

2012 இல் 88 புலிகள், 2013 இல் 68, 2014 இல் 78, 2015 இல் 82, 2016 இல் 121, 2017 இல் 117, 2018 இல் 101, 2019 இல் 96, 2020 இல் 127, 2021 இல் 127, 2022 இல் 121 புலிகள் இறப்புகள் பதிவாகியுள்ளன.

புலிகள் இறப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை என தெரிவித்துள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், புலிகள் இறப்புக்கான காரணங்கள் இயற்கையாகவோ அல்லது இயற்கைக்கு மாறானதாகவோ இருக்கலாம். இயற்கைக்கு மாறான காரணங்களில் விபத்துகள் காரணமாக ஏற்படும் மரணங்கள், புலிகளுக்கு இடையே ஏற்படும் மோதல்களினால் ஏற்படும் இறப்புகள் ஆகியவை அடங்கும். இதில் வேட்டையாடுதல் என்பது தனி.

பொதுவாக இந்த ஆண்டு புலிகளை வேட்டையாடுதல் வழக்குகள் அதிகரித்திருப்பதாகவும், புலிகளின் தோல்கள் மற்றும் நகங்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்ததாகப் பல தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த ஆண்டு இதுவரை 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

"சமீபத்தில் போரிவலியில், சட்டவிரோதமாக புலித்தோல் கடத்தியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த வாரம், கர்நாடகாவைச் சேர்ந்த மேலும் ஒரு குற்றவாளியை கைது செய்ததாகவும், சுமார் ரூ.10.6 லட்சம் மதிப்பிலான புலித்தோல் மற்றும் புலி நகங்களை பறிமுதல் செய்தாக மூத்த காவல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

"ஆப்பிரிக்க சிறுத்தையை அறிமுகப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வனத்துறையின் திறனை மேம்பாட்டுக்கு பயன்படுத்திருந்தால், இதுபோன்ற உயிரிழப்புகள் அதிகரிப்பதைத் தடுத்திருக்க முடியும்" என்று எர்த் பிரிகேட் அறக்கட்டளையின் இயக்குநர் சரிதா சுப்ரமணியம் கூறியுள்ளார். 

புலிகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தியாவின் போக்கு கவலையளிப்பதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.