பெங்களூரு: வெளிப்படையான, ஊழலற்ற நல்லாட்சியை வழங்குவதாக உறுதியளித்துவிட்டு, கர்நாடக முதல்வராகியிருக்கும் சித்தராமையாவுக்கு எண்ணற்ற சவால்கள் காத்திருக்கின்றன.
சவால்களை முறியடித்து சாதிப்பாரா.. ஆழ்ந்த அனுபவத்துக்கு விடுக்கப்பட்ட சோதனைகளை வெல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த அமைச்சர்கள், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி என கம்பீரமாக முதல்வர் பதவியேற்றிருக்கும் சித்தராமையா, தனது அரசியல் வாழ்வின் கிட்டத்தட்ட இறுதிக்காலத்தில் இருக்கிறார்.
1978ஆம் ஆண்டுக்குப் பிறகு, கர்நாடகத்தில், ஒருவர் 5 ஆண்டுகளும் முதல்வராக பதவி வகித்தபிறகு, மீண்டும் மாநில முதல்வராக பதவியேற்றதேயில்லை.
அப்படி மீண்டும் முதல்வராகியிருக்கும் சித்தராமையா, தேர்தல் வாக்குறுதிகளில் முதல் ஐந்து வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதை நிறைவேற்றுவதில் என்ன சிக்கல் உள்ளது என்றால், தேர்தல் வாக்குறுதியில் அளித்த அனைத்து இலவசங்களையும் அரசு நிறைவேற்ற ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. இது ஆண்டு பட்ஜெட் நிதியில் 20 சதவிகிதத்துக்கும் மேல்.
ஆனால், இந்த திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றால், மாநில அரசின் வருவாய் அதிகரித்திருக்க வேண்டும். இல்லையென்றால் கடன் வாங்க வேண்டியதிருக்கும். கடன் வாங்கினால் அது மாநிலத்தின் பொருளாதார நிலைமையை சிக்கலாக்கிவிடும். வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும் அது மாநிலத்தில் சிக்கலைத்தான் ஏற்படுத்தும்.
ஒரு பக்கம் இலவச திட்டங்களை நிறைவேற்றுவதில் முதல்வர் கவனம் செலுத்துவது முக்கியம் என்றாலும், மறுபக்கம் மாநிலத்தின் மேம்பாட்டு திட்டங்களையும், வேலை வாய்ப்புகளையும் உருவாக்கித்தரவேண்டும். அதிலும் கவனம் செலுத்த வேண்டும் இது இரண்டாம்தர மக்களின் எதிர்பார்ப்பு.
எனவே, ஆழ்ந்த அனுபவம் கொண்ட சித்தராமையாவுக்கு இது கடும் சோதனையாகவே பார்க்கப்படுகிறது.
மாநில வளர்ச்சிப் பணிகள் ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம், 40 சதவிகித அரசு என்று பாஜக அரசுக்கு எதிராக ஊர் முழுக்க தம்பட்டம் அடித்து ஆட்சியைப்பிடித்திருக்கும் சித்தராமையாவின் அரசு நடவடிக்கைகளை பாஜக தலைவர்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு நடவடிக்கையில் ஒரு சிறு தவறு நேர்ந்துவிட்டாலும், அதனை பாஜக எளிதில் விட்டுவிடாது.
அது மட்டுமல்லாமல், பாஜக செய்துவந்த சில திட்டப்பணிகளை புதிய அரசு கைவிடும்பட்சத்தில் அது இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையாக திருப்பிவிடப்படலாம்.
வரும் மக்களவைத் தேர்தலுக்குள், ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் திரும்பாத வகையில், உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் சித்தராமையா தள்ளப்பட்டுள்ளார். அவரது நல்லாட்சி மூலமாக, வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுத்தர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதையெல்லாம் அவர் நிறைவேற்ற, துணை முதல்வர் சிவகுமாரின் ஆதரவும் தேவைப்படுகிறது. அதையும் அவர் பெறவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.