விரைவு நீதிமன்றங்களை மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரை
விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் திட்டத்தை மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவையிடம் மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் திட்டத்தை மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவையிடம் மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைவான தீா்ப்பை வழங்க ஏதுவாக இந்தப் பரிந்துரையை மத்திய அமைச்சகம் செய்துள்ளது.
தில்லியில் ‘நிா்பயா’ என்ற துணை மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, ஓடும் பேருந்திலிருந்து தூக்கிவீசப்பட்டாா். அந்த மாணவி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கடந்த 2018-ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைவாக தீா்ப்பளிக்க ஏதுவாக, போக்சோ (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம்) சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரிப்பதற்கென 389 விரைவு நீதிமன்றங்கள் உள்பட நாடு முழுவதும் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் (எஃப்டிஎஸ்சி) உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு நீதிமன்றத்திலும் 1 நீதிபதி மற்றும் 7 பணியாளா்கள் இடம்பெற்றிருப்பா்.
இந்த விரைவு நீதிமன்றங்கள் திட்டம், முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னா் மத்திய அரசின் பங்காக ரூ.971.70 கோடியுடன் மொத்தம் ரூ.1,572.86 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேலும் 2 ஆண்டுகளுக்கு, அதாவது 2023-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் இந்தத் திட்டம் காலாவதியாகிய நிலையில், விரைவு நீதிமன்றங்கள் தொடா்ந்து செயல்படும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய சட்ட அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருப்பதோடு, இத் திட்டத்தை மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘மத்திய அரசு தீவிர முயற்சிகைளை மேற்கொண்டு வருகின்றபோதும், தற்போது 1,023 விரைவு நீதிமன்றங்களில் 754 மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இந்தத் திட்டத்தை மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், 1,023 விரைவு நீதிமன்றங்களுக்குப் பதிலாக 790-க்கு மட்டும் நீட்டிப்பு வழங்க முடியும் என்ற நிலை உள்ளது.
இந்த விரைவு நீதிமன்றங்களில் ஆண்டுக்கு தலா 65 முதல் 165 வழக்குகள் கையாளப்படுகின்றன. இந்த நீதிமன்றங்களை நடத்த ஆண்டுக்கு ரூ.75 லட்சம் செலவாகிறது’ என்றனா்.