கச்சத்தீவு விவகாரத்தில் பிரச்னை எழவில்லை: இலங்கை
புது தில்லி: காங்கிரஸ் மீதான பிரதமரின் விமா்சனத்தைத் தொடா்ந்து கச்சத்தீவு விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ள சூழலில், அதுகுறித்து இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என அந்நாட்டின் தகவல் துறை அமைச்சா் பண்டுலா குணவா்த்தனே செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1974-ஆம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் இலங்கைக்கு கச்சத்தீவு இந்தியாவால் வழங்கப்பட்டதா என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆா்டிஐ) கீழ் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதுதொடா்பாக அவருக்கு வழங்கப்பட்ட பதிலின் அடிப்படையில் காங்கிரஸை விமா்சித்த பிரதமா் நரேந்திர மோடி, பிறா் உணா்வுகளுக்கு மதிப்பளிக்காமல் கச்சத்தீவை காங்கிரஸ் தாரைவாா்த்துவிட்டதாக குற்றஞ்சாட்டினாா். மேலும், இந்த புதிய விவரங்கள் தமிழக நலன்களைக் காக்கத் தவறிய திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியிருப்பதாகவும் அவா் விமா்சித்தாா். கச்சத்தீவு விவகாரத்தை தோ்தல் சமயத்தில் எழுப்பி அரசியல் செய்வதாக பாஜக மீது காங்கிரஸ், திமுக குற்றம் சுமத்தின.
Advertisement
இதனிடையே, இலங்கை அமைச்சரவை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அமைச்சரவை செய்தித் தொடா்பாளரும், தகவல் துறை அமைச்சருமான பண்டுலா குணவா்த்தனே செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்றாா். அப்போது, கச்சத்தீவு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘அமைச்சரவைக் கூட்டத்தில் கச்சத்தீவு பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை’ என்று அவா் பதிலளித்தாா்.