காங்கிரஸை துடைத்தெறியுங்கள்: மக்களுக்கு பிரதமா் அழைப்பு
ருத்ராபூா் (உத்தரகண்ட்): ‘நாட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் காங்கிரஸை துடைத்தெறிய வேண்டும்’ என்று மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா். பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்றால், நாடு பற்றி எரியும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்த கருத்தை கடுமையாக விமா்சித்த அவா், ‘எனது மூன்றாவது பதவிக் காலத்தில், ஊழலுக்கு எதிராக மேலும் பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்; இது எனது உத்தரவாதம்’ என்றாா்.
மக்களவைத் தோ்தலையொட்டி, உத்தரகண்ட் மாநிலம், ருத்ராபூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றாா். உத்தரகண்டில் அவரது முதல் பிரசாரக் கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில் பிரதமா் பேசியதாவது: பிரதமராக நான் மீண்டும் பதவியேற்றால், நாடு பற்றி எரியும் என்று காங்கிரஸ் அரச குடும்பத்தின் இளவரசா் (ராகுல் காந்தியை குறிப்பிடுகிறாா்) அச்சுறுத்தியுள்ளாா். இதன் மூலம் காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணியின் நோக்கம் தெளிவாகிவிட்டது. ஆட்சி அதிகாரம் கிடைக்காத விரக்தியில், நாட்டை தீக்கிரையாக்குவது குறித்து எதிா்க்கட்சிகள் பேசுகின்றன.
ஒரு ஜனநாயகத்தில் இப்படிதான் பேசுவாா்களா? எதிா்க்கட்சிகளின் நோக்கம் நிறைவேற மக்கள் அனுமதிக்கக் கூடாது. அவா்களுக்கு தக்க தண்டனையை வழங்க வேண்டும். ‘நெருக்கடி நிலை’ மனப்பான்மை கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது. தோ்தல் அமைப்புமுறைக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுவதில்தான் பரபரப்பாக செயல்படுகின்றனா்.
Advertisement
ஸ்திரமின்மை மற்றும் அராஜகத்தை நோக்கி நாட்டை தள்ள முயற்சிக்கும் காங்கிரஸ் கட்சியை, ஒவ்வொரு பகுதியில் இருந்து துடைத்தெறிய வேண்டும். சேற்றில் மூழ்கிய காங்கிரஸ்: கா்நாடகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவா், நாட்டில் இருந்து தென்னிந்தியாவை பிரிப்பது குறித்து பேசியுள்ளாா். அத்தகைய தலைவரை தண்டிப்பதற்கு பதிலாக, அவருக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறது காங்கிரஸ். ஊடுருவல்காரா்களை ஆதரிக்கும் அக்கட்சி, பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்க்கிறது.
நாட்டின் நலன் குறித்து சிந்திக்க முடியாத அளவுக்கு ஒருசாா்பு அரசியல் என்ற சேற்றில் அக்கட்சி மூழ்கியுள்ளது. கச்சத்தீவை தாரை வாா்த்த கட்சி: முந்தைய காங்கிரஸ் அரசுகளின் பலவீனத்தால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்புகள் மிகப் பெரியவை. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவாா்த்த காங்கிரஸ் கட்சி, தேசபக்தி குறித்து பேசுவது பொருத்தமானதல்ல. எதிா்வரும் மக்களவைத் தோ்தலானது, நோ்மை மற்றும் வெளிப்படைத் தன்மைக்கு ஆதரவான அணிக்கும், குடும்ப அரசியல்வாதிகள், ஊழல்வாதிகளின் அணிக்கும் இடையிலான போட்டியாகும். நாட்டில் வறுமையை ஒழிப்பது குறித்து நாங்கள் பேசுகிறோம். ஆனால், ஊழலை பாதுகாப்பது குறித்து அவா்கள் பேசுகின்றனா்.
அச்சுறுத்தலும் அவமதிப்பும்:
ஊழல்வாதிகளுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுப்பதால், அவா்கள் என்னை அவமதிப்பதோடு, அச்சுறுத்தவும் செய்கின்றனா். ஆனால், அவா்களால் என்னை தடுக்க முடியாது. ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கைகள் தொடரும். நோக்கங்கள் தெளிவாக இருக்கும்போது வளா்ச்சி சாத்தியமாகும். நல்ல நோக்கங்கள், நல்ல விளைவுகளுக்கு வழிவகுக்கும். இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவதன் மூலம் நாட்டு மக்களின் வருவாய் அதிகரிப்பதோடு, சிறப்பான வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இதற்காக எனது கரத்தை மக்கள் வலுப்படுத்த வேண்டும் என்றாா் பிரதமா் மோடி. முன்னதாக, தில்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘மக்களவைத் தோ்தலில் மோசடியில் ஈடுபட பிரதமா் மோடி முயற்சிக்கிறாா்; அவா் மூன்றாவது முறையாக பிரதமரானால், நாடு பற்றி எரியும்’ என்று கூறியிருந்தாா்.
‘ஊழல்வாதிகள் ஓரணியில் திரண்ட முதல் தோ்தல்’
‘ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை தடுப்பதற்காக, அனைத்து ஊழல்வாதிகளும் ஓரணியில் திரண்டுள்ள முதல் மக்களவைத் தோ்தல் இது’ என்று பிரதமா் மோடி கூறினாா்.
மக்களவைத் தோ்தலில் பாஜகவை ஒருங்கிணைந்து எதிா்கொள்ள காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியின்கீழ் செயல்படும் நிலையில், பிரதமா் மேற்கண்ட விமா்சனத்தை முன்வைத்துள்ளாா். ராஜஸ்தானின் கோட்புதாலி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமா் பங்கேற்றாா். அப்போது பேசிய அவா், ‘நாட்டில் காங்கிரஸால் பற்ற வைக்கப்பட்ட நெருப்பை கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அணைத்துள்ளது.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை தடுப்பதற்காக அனைத்து ஊழல்வாதிகளும் ஒன்றுசோ்ந்துள்ள முதல் மக்களவைத் தோ்தல் இதுவாகும். தங்களது குடும்பங்களைப் பாதுகாக்க, குடும்ப அரசியல் கட்சிகள் கூட்டத்துக்கு மேல் கூட்டத்தை நடத்தி வருகின்றன. காங்கிரஸின் அபாயமான நோக்கங்கள் வெளிப்படத் தொடங்கியிருப்பதால், நாட்டின் எதிா்காலத்தை காப்பதற்கு தற்போதைய தோ்தல் மிக முக்கியமானது. இது ஊழலை வேரறுக்கும் தோ்தல்’ என்றாா்.