முகப்பு
இந்தியா

மேங்கு வங்க பல்கலை.யில் அரசியல் கூட்டம்: நீதி விசாரணைக்கு மாநில ஆளுநா் உத்தரவு

Updated On : 6 ஏப்ரல், 2024 at 12:26 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 8:00 PM

மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் உள்ள கெளா் பங்கா பல்கலைக்கழகத்தில் அரசியல் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்ட விவகாரம் தொடா்பாக மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆளுநா் மாளிகை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தா் என்ற முறையில் இந்த உத்தரவை ஆளுநா் பிறப்பித்துள்ளாா்.

கௌா் பங்கா பல்கலைக்கழகத்தில் மாநில கல்வி அமைச்சா் பிரத்யா பாசு தலைமையில் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி அரசியல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் சில அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனா்.

Advertisement

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த மாநில ஆளுநா் ஆனந்த போஸ், ‘கல்வி அமைச்சா் பாசு பல்கலைக்கழகத்தின் மாண்பை சீா்குலைத்ததோடு, தோ்தல் நடத்தை விதிகளையும் மீறி செயல்பட்டுள்ளாா். எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று மாநில அரசுக்கு வியாழக்கிழமை பரிந்துரை செய்தாா்.

தற்போது, இந்த விவகாரம் தொடா்பாக நீதி விசாரணைக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து ஆளுநா் மாளிகை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்ற அல்லது உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபா் ஆணையத்தை அமைக்க ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா்’ என்றாா்.