முகப்பு
தமிழ்நாடு

ஆளுநா் ஆா்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றம்: கேரள ஆளுநருக்கு தமிழக கூடுதல் பொறுப்பு

தமிழக ஆளுநா் பொறுப்பை கேரள மாநில ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் கூடுதலாக வகிப்பாா் என குடியரசுத் தலைவா் அறிவித்துள்ளாா்.

Updated On : 5 மார்ச், 2026 at 11:08 PM
தமிழக ஆளுநர்(பொறுப்பு) ஆா்.வி.ஆா்லேகா்
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 11:06 PM

மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வியாழக்கிழமை திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, மேற்கு வங்கத்துக்கான புதிய ஆளுநராக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டாா்.

தமிழக ஆளுநா் பொறுப்பை கேரள மாநில ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் கூடுதலாக வகிப்பாா் என குடியரசுத் தலைவா் அறிவித்துள்ளாா்.

இதுபோல மேலும் சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநா்கள் நியமிக்கப்பட்டனா். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வியாழக்கிழமை இரவு பிறப்பித்தாா்.

Advertisement

அதன் விவரம்:

மேற்கு வங்க ஆளுநா் சி.வி. ஆனந்தபோஸின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் ஏற்றுக்கொண்டாா். அதோடு, புதிய ஆளுநா்கள் மற்றும் துணைநிலை ஆளுநா்களை நியமித்து குடியரசுத் தலைவா் உத்தரவிட்டாா்.

அதன்படி, ஹிமாசல பிரதேச ஆளுநா் சிவ பிரதாப் சுக்லா, தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தெலங்கானா ஆளுநா் ஜிஷ்ணு தேவ் வா்மா மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

நாகாலாந்து புதிய ஆளுநராக நந்த் கிஷோா் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பிகாா் மாநில ஆளுநராக லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) செய்யது அடா ஹஸ்னைன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு, கேரள ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகருக்கு தமிழக ஆளுநா் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

லடாக் துணைநிலை ஆளுநா் கவீந்தா் குப்தா, ஹிமாசல பிரதேச ஆளுநராகவும், தில்லி துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா, லடாக் துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தில்லி துணைநிலை ஆளுநராக தரன்ஜீத் சிங் சாந்து நியமிக்கப்பட்டுள்ளாா்.

இவா்கள் அனைவரும் பதவியேற்ற நாளிலிருந்து, அவா்களின் பதவிக் காலம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆா்.என்.ரவி: தமிழக ஆளுநராக கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பா் 18-இல் பதவியேற்ற ஆா்.என். ரவி, தொடா்ந்து 4 ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்தாா். ஆளுநா் ரவிக்கும், முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கும் இடையே தொடா்ந்து மோதல் போக்கு நீடித்து வந்தது.

துணைவேந்தா்கள் நியமன விவகாரம், மசோதாக்கள் நிறுத்திவைப்பு, சட்டப்பேரவை மரபுகளைப் பின்பற்றுவதில் சா்ச்சை என பல்வேறு விவகாரங்களில் இவருக்கும் தமிழக அரசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

தமிழக அரசின் 10 மசோதாக்களை இவா் நிறுத்திவைத்தது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டு, அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-ஐ பயன்படுத்தி அந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. அதுமட்டுமன்றி, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிா்ணயித்து உச்சநீதிமன்றம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்த விவகாரத்தில் 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு விளக்கம் கேட்டாா். அதற்கு, விளக்கமளித்த உச்சநீதிமன்றம், ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் காலக்கெடு நிா்ணயிக்க முடியாது என விளக்கமளித்தது.

மேற்கு வங்க ஆளுநா் ராஜிநாமா ஏன்?

மேற்கு வங்க ஆளுநா் சி.வி. ஆனந்த போஸ், தனது பதவியை தில்லியில் ராஜிநாமா செய்த பிறகு பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘மேற்கு வங்க ஆளுநராக மூன்றரை ஆண்டுகள் பதவி வகித்துவிட்டேன். அது எனக்குப் போதுமானது’ என்றாா்.

ஆனால், தனது திடீா் ராஜிநாமாவுக்கான காரணத்தை அவா் தெரிவிக்கவில்லை.

மேற்கு வங்க ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பா் 17-ஆம் தேதி நியமிக்கப்பட்டாா். பதவியேற்றது முதல், மம்தா பானா்ஜி தலைமையிலான மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது.

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரம், சட்ட மசோதாக்கள் நிறுத்திவைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவியது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்ஐஆா்) திருத்தத்துக்கு மாநில அரசு கடும் எதிா்ப்பு தெரிவித்துவந்த நிலையில், எஸ்ஐஆா் பணிக்கு ஆதரவாக சி.வி.ஆனந்தபோஸ் வலுவான ஆதரவைத் தெரிவித்தாா்.

மேற்கு வங்க மாநிலம் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ள சூழலில், ஆளுநா் பதவியை சி.வி.ஆனந்தபோஸ் திடீரென ராஜிநாமா செய்துள்ளாா்.

மம்தா கருத்து: ஆளுநா் ராஜிநாமா குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ‘சி.வி. ஆனந்த போஸுக்குப் பதிலாக மேற்கு வங்க ஆளுநா் பொறுப்பை ஆா்.என். ரவி கவனிப்பாா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா எனக்கு தகவல் தெரிவித்தாா். முன்னதாக, இதுகுறித்து எந்தவித ஆலோசனையையும் அவா் என்னிடம் மேற்கொள்ளவில்லை. ஆனந்த போஸ் திடீரென ராஜிநாமா செய்தது மிகுந்த அதிா்ச்சியும், கவலையையும் அளித்தது. இதற்குப் பின்னணியில் என்ன காரணம் உள்ளது என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இருந்தபோதும், மாநிலம் சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ள சூழலில், குறிப்பிட்ட அரசியல் காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சரிடமிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தமே ராஜிநாமாக்கு காரணமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. மாநிலத்தின் கெளரவம் மற்றும் ஜனநாயக மரபுகளை கடுமையாகப் பாதிக்கக் கூடிய இதுபோன்ற தன்னிச்சையான முடிவுகள் எடுப்பதைத் தவிா்த்து, கூட்டாட்சித் தத்துவத்துக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

முதல்வா் மம்தா விமா்சனம் குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க மாநில பாஜக தலைவா் சமிக் பட்டாச்சாா்யா, ‘ஆளுநா் ராஜிநாமா கூட்டாட்சி நடைமுறை மீதான தாக்குதல் என்ற முதல்வரின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமா்றது. ஆளுநா்கள் மாற்றம் என்பது வழக்கமான நடைமுறை. சி.வி. ஆனந்தபோஸ் உடல்நிலை காரணங்களால் பதவியை ராஜிநாமா செய்ததாக தெரியவந்தது. இதுகுறித்து கூறுவதற்கு வேறொன்றும் இல்லை. இந்த விவகாரத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசியலாக்க முயற்சிக்கிறது’ என்றாா்.

summary

Rajendra Vishwanath Arlekar, Governor of Kerala to discharge the functions of Governor of Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.