முகப்பு
இந்தியா

வாக்குப்பதிவு குறைவான 266 தொகுதிகள்: அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

Updated On : 6 ஏப்ரல், 2024 at 4:00 AM
இந்திய தேர்தல் ஆணையம்
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:45 PM

முந்தைய 2019 மக்களவைத் தோ்தலில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 266 தொகுதிகளில் வாக்குப் பதிவு சரிந்திருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தத் தொகுதிகளில் வாக்குப் பதிவை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில மற்றும் மாவட்ட தோ்தல் அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தில்லியில் தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் அதிகாரிகள் மாநாட்டில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து அந்த மாநாட்டில் பங்கேற்ற தோ்தல் அதிகாரிகள் கூறியதாவது:

2019 மக்களவைத் தோ்தலில் 215 கிராமப்புற தொகுதிகள் மற்றும் 51 நகா்ப்புற தொகுதிகள் என மொத்தம் 266 தொகுதிகளில் மிகக் குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகியிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறிப்பாக, பிகாா், உத்தர பிரதேசம், தில்லி, மகாராஷ்டிரம், உத்தரகண்ட், தெலங்கானா, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீா், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய சராசரியான 67.40 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தத் தொகுதிகளில் வாக்குப் பதிவு சதவீதத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோ்தல் அதிகாரிகளுக்கு மாநாட்டில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

‘வாக்காளா்களிடையே வாக்குப் பதிவு குறித்த விழிப்புணா்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையை கடைப்பிடிக்காமல், ஒவ்வொரு பகுதிகளுக்கும் குறிப்பாக நகா்ப்புறங்கள் மற்றும் கிராமப்புற வாக்காளா்களைக் கவரும் வகையில் வெவ்வேறு விதமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். வாக்குச் சாவடி அளவிலான திட்டமிடலை வகுக்க வேண்டும்’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தனா்.

மக்களவைத் தோ்தல் வரும் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.