புதுதில்லி: அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் கொண்ட அறிக்கையை காங்கிரஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
"எதிர்காலம் இன்றைய இளைஞர்களிடம் உள்ளது" என்பது இந்தியா போன்ற சராசரியாக 28 வயதுடைய இளம் தேசத்திற்கு மிகவும் பொருத்தமானது.இந்திய இளைஞர்கள் வேலையின்மை மற்றும் நம்பிக்கையின்மையை எதிர்கொள்கின்றனர். இதற்கு பாஜக மற்றும் என்டிஏ அரசாங்கத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மிக மோசமடைந்து வரும் வேலையின்மையை முக்கிய காரணம். இந்தப் பிரச்னையை ஒரு தெளிவான யுவ நிதி திட்டம் மூலம் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
- 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- தொழிற்பயிற்சி திறன்களை வழங்கும்,வேலைவாய்ப்பை மேம்படுத்துதல் மற்றும் முழுநேர வேலை வாய்ப்பை வழங்குதல் மற்றும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு நலன்களை பாதுகாக்கும் வகையில் டிப்ளமோ அல்லது 25 வயதிற்குள் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு தனியார் அல்லது பொதுத் துறையில் தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படும். தொழில் பழகுநர் பயிற்சி மேற்கொள்ள இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.
- அரசு தேர்வுகள், அரசுப் பணிகளுக்கான விண்ணப்ப கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.
- வேலையின்மை காரணமாக, ஒருமுறை நிவாரண நடவடிக்கையாக 2024 மார்ச் 15 வரை பெறப்பட்ட அனைத்துக் கல்விக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் மற்றும் வங்கிகளுக்கு அரசாங்கத்தால் அதற்கான இழப்பீடு வழங்கப்படும்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் கல்லூரி, கால்நடை கல்லூரி, மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்.
- 21 வயதுக்குட்பட்ட திறமையுள்ள வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும்.
- கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான வழக்குகளை தீர்ப்பதற்கு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அரசுப் பணி தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிவு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பண இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிலவும் ஒப்பந்த முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, முறையான பணி நியமன முறை உறுதி செய்யப்படும்.
- அனுமதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 30 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்.
- அங்கன்வாடி பணியிடங்களை இரட்டிப்பாகி 14 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- நாடு முழுவதும் மாணவர்களுக்கு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும்.
- கல்வி நிலையங்களில் பட்டியலின வகுப்பினர் துன்புறுத்தலுக்கு ஆளாவதைத் தடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.