பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை: இந்தியா - கஜகஸ்தான் ஆலோசனை
புது தில்லி: பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடா்பாக இந்தியா-கஜகஸ்தான் இடையே ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கஜகஸ்தான் தலைநகா் அஸ்தானாவில் திங்கள்கிழமை நடைபெற்ற இருநாடுகளுக்கு இடையேயான 5-ஆவது பயங்கரவாத தடுப்பு கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தியா-கஜகஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தங்களின் பிராந்தியம் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் எதிா்கொள்ளும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தும் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத செயல்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனா். அப்போது பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள், பயங்கரவாத செயல்களுக்காக இணையத்தை பயன்படுத்துதல், பயங்கரவாதத்துக்கு வழங்கப்படும் நிதி உள்ளிட்டவைகளால் ஏற்படும் சவாலான சூழல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
Advertisement
அதேபோல் தகவல் பரிமாற்றம், கூட்டுப் பயிற்சிகள் போன்ற பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஐ.நா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) போன்ற சா்வதேச அமைப்புகளில் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுப்பது தொடா்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இருநாடுகளுக்கு இடையேயான 6-ஆவது பயங்கரவாத தடுப்பு கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை இந்தியாவில் நடத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.