ANI
ANI
இந்தியா

கைது சட்டவிரோதமல்ல: அமலாக்கத்துறை கைதை எதிர்த்த கேஜரிவால் மனு தள்ளுபடி

DIN

புது தில்லி: தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு விசாரணையில், அமலாக்கத் துறையால் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டிருப்பது சட்டவிரோதமானது அல்ல என்பதே நீதிமன்றத்தின் கருத்தாக உள்ளது. அவரை நீதிமன்றக் காவலில் வைத்திருப்பதும் சட்டவிரோதமல்ல என்று தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த ஷர்மா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அமலாக்கத் துறையால் தான் கைது செய்யப்பட்டதை மட்டுமல்லாமல், இந்த வழக்கில், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு அனுமதிக்கப்படுவதையும் எதிர்த்து அரவிந்த் கேஜரிவால் மனுதாக்கல் செய்திருந்தார்.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. கேஜரிவாலை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, தோ்தல் நடைபெறும் சமயத்தில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்தது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கு முரணானது என்று கூறி, தில்லி உயா்நீதிமன்றத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி ஸ்வா்ண கந்த ஷா்மா முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜூவும், கேஜரிவால் தரப்பில் அபிஷேக் சிங்வியும் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் வழக்கு தொடங்கியவுடன் பேசிய நீதிபதி,

“அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் கேஜரிவாலுக்கு வழக்கில் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. காணொலி மூலம் ஆஜராக ஒப்புக் கொண்டதாக கேஜரிவால் தரப்பின் வாதத்தை ஏற்க முடியாது. குற்றம்சாட்டப்பட்டவர் தன்னை எப்படி விசாரிக்க வேண்டும் எனக் கூறமுடியாது. பொதுமக்களுக்கு ஒரு சட்டம், அரசு அதிகாரிகளுக்கு ஒரு சட்டம் வகுக்க முடியாது. முதல்வர் என்பதற்காக எந்த சலுகையும் தர முடியாது.

பொதுத் தேர்தலையொட்டி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் வாதத்தை ஏற்க முடியாது. ஆதாரங்களுடன் சட்டப்படிதான் கைது நடவடிக்கையை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது.

இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கும் கேஜரிவாலுக்கு இடையேயானது தவிர, மத்திய அரசுக்கும் கேஜரிவாலுக்கும் இடையேயானது கிடையாது.

ஆதாரங்களின் அடிப்படையில் சட்டத்தின்படிதான் தீர்ப்பு வழங்க முடியும். கேஜரிவால் கைது செய்யப்பட்டது செல்லும்.” எனத் தெரிவித்து கேஜரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், அரவிந்த் கேஜரிவாலின் தரப்பில் நாளை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக ஆம் ஆத்மி தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெங்கு தின விழிப்புணா்வுப் பேரணி

கடல் சீற்றம்: மீனவா்களுக்கு மீன்வளத் துறை எச்சரிக்கை

சாலைப் பணிகளை முடிக்கக் கோரி இந்திய கம்யூ. கையொப்ப இயக்கம்

குடிசை வீடு தீக்கிரை

பள்ளி மாணவி மாயம்

SCROLL FOR NEXT