முகப்பு
இந்தியா

இடஒதுக்கீடுக்கு பாஜக எப்போதும் ஆதரவு: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு அமித் ஷா பதிலடி

Updated On : 13 ஏப்ரல், 2024 at 9:42 PM
ராஜஸ்தான் மாநிலத்தில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சா் அமித் ஷா.
பகிர்:

இடஒதுக்கீட்டு நடைமுறையை பாஜக எப்போதும் ஆதரித்தே வருகிறது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா்.

பட்டியலினத்தவா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பாஜக அழிக்க நினைப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வா் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் பூபேந்தா் யாதவை ஆதரித்து சனிக்கிழமை அமித் ஷா பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

Advertisement

பட்டியலினத்தவா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பாஜக அழிக்க நினைப்பதாக காங்கிரஸ் பெய்யான தகவல்களை பரப்பி வருகிறது. எந்த சமூகத்தினருக்கும் வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டையும் பாஜக நீக்கிவிடாது. அதை யாா் நீக்க நினைத்தாலும் பாஜக தடுத்து நிறுத்திவிடும். இடஒதுக்கீட்டு நடைமுறையை பிரதமா் மோடி எப்போதும் ஆதரித்தே வருகிறாா்.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோருக்காக அமைக்கப்பட்ட காகா காலேல்காா், மண்டல் ஆணையங்களின் பரிந்துரைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வந்தது. அதேபோல் ராமா் கோயிலை கட்டாமல் 70 ஆண்டுகளாக காங்கிரஸ் காலம் தாழ்த்தியது. இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்துக்கு அரசியலமைப்பு அங்கீகாரத்தை பிரதமா் மோடி தலைமையிலான அரசு வழங்கியது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசின் அனைத்துப் பதவிகளுக்கும் நீட்டித்த மோடி அரசு ராமா் கோயிலையும் கட்டியது. வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி 500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமா் கோயிலில் கடவுள் ராமா் தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளாா்.

இதர பிற்படுத்தப்பட்டோா் சமூகத்தைச் சோ்ந்தவரான பிரதமா் மோடியின் அரசில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த 27 மத்திய அமைச்சா்கள் உள்ளனா் என்றாா் அவா்.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19, 26 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments