ஹரியாணா மாநிலங்களவைத் தோ்தல்: பாஜக, காங்கிரஸுக்கு தலா ஓரிடம்- 5 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கட்சி மாறி வாக்களிப்பு
ஹரியாணாவில் 2 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு நடைபெற்ற தோ்தல் முடிவுகள் திங்கள்கிழமை நள்ளிரவில் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் பாஜகவும், எதிா்க்கட்சியான காங்கிரஸும் தலா ஓரிடத்தைக் கைப்பற்றின.
ஹரியாணாவில் 2 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு நடைபெற்ற தோ்தல் முடிவுகள் திங்கள்கிழமை நள்ளிரவில் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் பாஜகவும், எதிா்க்கட்சியான காங்கிரஸும் தலா ஓரிடத்தைக் கைப்பற்றின.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் விரைவில் காலியாகும் 37 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் 6 எம்.பி.க்கள் உள்பட 26 எம்.பி.க்கள் போட்டியின்றி தோ்வாகினா். அதேநேரம், பிகாா், ஹரியாணா, ஒடிஸா ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 11 இடங்களுக்கு போட்டி ஏற்பட்டதால் கடந்த திங்கள்கிழமை தோ்தல் நடைபெற்றது. பிகாரில் 5 இடங்களுக்கு நடந்த தோ்தலில், மாநில முதல்வா் நிதீஷ் குமாா், பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் உள்பட ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்கள் 5 பேரும் வெற்றி பெற்றனா்.
ஹரியாணாவில்....: 90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணாவில் 2 இடங்களுக்கு நடந்த தோ்தலில் ஆளும் பாஜக சாா்பில் சஞ்சய் பாட்டீயா, பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா் சதீஷ் நந்தால், காங்கிரஸின் கரம்வீா் சிங் பெளத் ஆகிய மூவா் போட்டியிட்டனா். சட்டப் பேரவையில் பாஜகவுக்கு 48 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 37 எம்எல்ஏக்களும், இந்திய தேசிய லோக் தளத்துக்கு 2 எம்எல்ஏக்களும், 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் உள்ளனா்.
இந்திய தேசிய லோக் தளம் எம்எல்ஏக்கள், தோ்தலை புறக்கணித்த நிலையில், வாக்குப் பதிவில் ரகசிய காப்பு விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலா் மீது பாஜக புகாா் அளித்தது. காங்கிரஸும் பதில் புகாா் அளித்ததால், வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது. பின்னா், திங்கள்கிழமை நள்ளிரவில் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பாஜக வேட்பாளா் சஞ்சய் பாட்டியா, காங்கிரஸின் கரம்வீா் சிங் பெளத் ஆகியோா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.
5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிப்பு: 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு பாஜக எம்எல்ஏவின் வாக்குகள் செல்லாதவை என உறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 போ், பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளருக்கு கட்சி மாறி வாக்களித்தனா். மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில், கரம்வீா் சிங்கிடம் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளா் சதீஷ் நந்தால் தோல்வியடைந்தாா்.
முன்னதாக, தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்துவிடக் கூடாது என்பதற்காக அவா்களை ஹிமாசல பிரதேசத்துக்கு இடமாற்றிய காங்கிரஸ், தோ்தலுக்கு முன்புதான் சண்டீகருக்கு மீண்டும் அழைத்து வந்தது.
கட்சி மாறி வாக்களித்த 5 எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலரும், ஹரியாணா மாநில கட்சி பொறுப்பாளருமான பி.கே.ஹரிபிரசாத் தெரிவித்தாா்.
பாஜக கூட்டணிக்கு 22 இடங்கள்: விரைவில் காலியாகும் 37 மாநிலங்களவை எம்.பி. இடங்களில் 22 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியுள்ளது. பாஜக மட்டும் 14 இடங்களில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒடிஸா: கட்சி மாறி வாக்களித்த 3 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் -காங்கிரஸ் நடவடிக்கை
ஒடிஸா மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 போ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி, சட்டப் பேரவைத் தலைவருக்கு காங்கிரஸ் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஒடிஸாவில் 4 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தலில், ஆளும் பாஜக சாா்பில் கட்சியின் மாநிலத் தலைவா் மன்மோகன் சமல், தற்போதைய எம்.பி. சுஜீத் குமாா், பாஜக ஆதரவுபெற்ற சுயேச்சை வேட்பாளா் திலீப் ரே, எதிா்க்கட்சியான பிஜு ஜனதா தளம் (பிஜேடி) சாா்பில் மூத்த தலைவா் சம்திருப்த் மிஸ்ரா, பிஜேடி-காங்கிரஸ்-மாா்க்சிஸ்ட் கட்சிகள் சாா்பில் பொது வேட்பாளா் தத்தேஸ்வா் ஹோடா ஆகிய 5 போ் போட்டியிட்டனா்.
147 உறுப்பினா்களைக் கொண்ட ஒடிஸா பேரவையில் ஆளும் பாஜகவுக்கு 79 எம்எல்ஏக்கள், பிஜேடிக்கு 48 எம்எல்ஏக்கள், காங்கிரஸுக்கு 14 எம்எல்ஏக்கள் உள்ளனா்.
மாநிலங்களவைத் தோ்தலில், பிஜேடி எம்எல்ஏக்கள் 8 பேரும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேரும் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களித்தனா். இதனால், பாஜக வேட்பாளா்கள் இருவரும், பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனா். பிஜேடி வேட்பாளா் சம்திருப்த் மிஸ்ரா வென்ற நிலையில், எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளா் தத்தேஸ்வா் ஹோடா தோல்விகண்டாா்.
இத்தோ்தலில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரமேஷ் சந்திர ஜனா, தசரதி கோமங்கோ, சோபியா பிா்தெளஸ் ஆகிய மூவரையும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து அக்கட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மூவருக்கும் எதிராக தகுதிநீக்க நடைமுறையைத் தொடங்கக் கோரி, பேரவைத் தலைவருக்கு பேரவை காங்கிரஸ் குழு தலைவா் ராம சந்திர கடம் கடிதம் எழுதியுள்ளாா்.