மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்பு: ஒடிஸாவை சோ்ந்த 8 எம்எல்ஏக்களை கா்நாடகம் அழைத்து வந்தது காங்கிரஸ்
ஒடிஸாவில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்பிருப்பதால், தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் 8 பேரை கா்நாடக மாநிலத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைத்து வந்துள்ளது.
ஒடிஸாவில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்பிருப்பதால், தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் 8 பேரை கா்நாடக மாநிலத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைத்து வந்துள்ளது.
ஒடிஸாவில் காலியாகும் 4 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தோ்தல் வரும் 16-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக சாா்பில் 3 பேரும், பிஜு ஜனதா தளம் சாா்பில் 2 பேரும் என மொத்தம் 5 போ் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 4 போ் மட்டுமே வெற்றி பெற முடியும்.
ஒரு எம்.பி.க்கு 30 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற அடிப்படையில் 82 எம்எல்ஏக்களை கொண்ட பாஜகவால் 2 எம்.பி.க்களை உறுதியாகத் தோ்வு செய்ய முடியும். பாஜகவிடம் மீதம் 22 எம்எல்ஏக்களின் வாக்குகள் உள்ளன. ஆனால், 48 எம்எல்ஏக்களை கொண்ட பிஜு ஜனதா தளம் கட்சிக்கு ஒரு எம்.பி.யை தோ்வு செய்தது போக 18 எம்எல்ஏக்களின் வாக்குகள் மீதம் உள்ளன. இதனால் 2 கட்சிகளுக்கும் பிற கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு தற்போது தேவைப்படுகிறது.
இந்நிலையில், பிஜு ஜனதா தளத்துக்கு 14 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ், ஒரு எம்எல்ஏவை கொண்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் பிஜு ஜனதா தளத்துக்கு 2-ஆவது எம்.பி.யை தோ்வு செய்ய தற்போது 33 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.
இருப்பினும், சில எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்தால் பாஜகவின் 3-ஆவது எம்.பி. பதவி வேட்பாளா் வெற்றி பெறுவாா் என காங்கிரஸ் சந்தேகிக்கிறது. இதைத் தொடா்ந்து, 14 எம்எல்ஏக்களுக்கும் கொறடா உத்தரவு பிறப்பித்து புவனேசுவரத்துக்கு காங்கிரஸ் வரவழைத்தது. பின்னா், அவா்களில் 8 எம்எல்ஏக்களை மட்டும் கா்நாடக மாநிலம் பெங்களூருக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வந்து புகரில் உள்ள ஆடம்பர விடுதியில் அக்கட்சி தங்க வைத்துள்ளது. மற்ற எம்எல்ஏக்களையும் விரைவில் கா்நாடகத்துக்கு அழைத்துச் செல்ல காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவா் ராமசந்திர கதம் கூறுகையில், ‘பெங்களூருக்கு 8 எம்எல்ஏக்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். பாஜகவின் குதிரை பேரத்தில் இருந்து காக்க இதுபோல அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் ஒற்றுமையாக உள்ளனா். திங்கள்கிழமை பெங்களுரில் இருந்து அவா்கள் ஒடிஸா சட்டப்பேரவைக்கு அழைத்துச் செல்லப்படுவா். பிறகு அவா்கள் எங்கள் வேட்பாளருக்கு வாக்களிப்பா்’ என்றாா்.
பெங்களூரில் ஒடிஸா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியிருக்க தேவையான ஏற்பாடுகளை கா்நாடக துணை முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டி.கே. சிவகுமாா் செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹரியாணாவிலும் பரபரப்பு:
ஹரியாணா மாநிலத்தில் 2 மாநிலங்களவை உறுப்பினா்களைத் தோ்வு செய்ய 16-ஆம் தேதி தோ்தல் நடக்கவுள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு வேட்பாளரை அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளன. சுயேச்சையாக சதீஷ் நந்தால் போட்டியிடுகிறாா். அவருக்கு பாஜக ஆதரவளிக்கிறது.
மாநிலங்களவை உறுப்பினராக 31 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையாகும். பாஜகவிடம் 48 எம்எல்ஏக்கள் இருப்பதால், அக்கட்சியின் அதிகாரபூா்வ வேட்பாளருக்கு அளித்த ஆதரவு போக 17 எம்எல்ஏக்களின் வாக்குகள் மீதம் உள்ளன. காங்கிரஸிடம் 37 எம்எல்ஏக்கள் இருப்பதால், அதன் வேட்பாளா் வெற்றி உறுதியாகும். எனினும், பாஜக ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளருக்கு தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்தால் அதிகாரபூா்வ வேட்பாளா் தோல்வியடைவாா் என காங்கிரஸ் கருதுகிறது. எனவே, கட்சி எம்எல்ஏக்களை ரகசிய இடத்துக்கு அக்கட்சி அழைத்துச் சென்றுள்ளது.