முகப்பு
இந்தியா

சீன விவகாரத்தில் சாதுவாக நடப்பதே மோடியின் கொள்கை: காங்கிரஸ் தலைவா் காா்கே

Updated On : 13 ஏப்ரல், 2024 at 8:32 PM
பகிர்:

சீன விவகாரத்தில் சாதுவாக நடப்பதே மோடியின் கொள்கையாக உள்ளது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:

கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரா்கள் வீரமரணமடைந்தனா்.

Advertisement

இந்நிலையில், இந்தியாவின் எந்தவொரு நிலப்பகுதியையும் சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் அண்மையில் தெரிவித்திருந்தாா். கல்வான் மோதல் சம்பவத்தில் சீனா குற்றம் இழைக்கவில்லை என்று பிரதமா் மோடி நற்சான்றளித்தாா். இதையே தற்போது ஜெய்சங்கரும் கூறியுள்ளாா். இதன் மூலம், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமிக்க சீனாவுக்கு மோடி அரசு இலவச அனுமதிச்சீட்டு வழங்கியுள்ளது.

அண்மையில் வெளிநாட்டு ஊடகத்துக்குப் பிரதமா் மோடி பேட்டி அளித்தாா். அப்போது அவா் சீனா உடனான எல்லை விவகாரத்தில் இந்தியாவின் தரப்பை உலக அரங்கில் வலுவாக எடுத்துரைக்கத் தவறிவிட்டாா். தற்போது இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமித்து தனது நிலப்பரப்பை விரிவுபடுத்தும் சீனாவுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் நற்சான்றிதழ் அளித்துள்ளாா்.

எல்லை பிரச்னை தொடா்பாக இந்தியா, சீனா இடையே எதற்காக 19 சுற்றுகளாகப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்தியாவில் சீன இறக்குமதியை அதிகரிக்க நடத்தப்பட்டதா? அல்லது சீனா்கள் இயக்குநா்களாக உள்ள 3,000 நிறுவனங்களிடம் இருந்து பிரதமரின் அவசர கால நிதிக்கு நிதியுதவி பெற நடைபெற்ா?

கிழக்கு லடாக் எல்லையில் 2020-ஆம் ஆண்டு இருநாட்டு வீரா்களுக்கு இடையே மோதல் ஏற்படும் முன் இருந்த சுமுக நிலை ஏன் அங்கு திரும்பவில்லை?

அந்த எல்லையில் உள்ள தெப்சாங் சமவெளி, தெம்சோக் நல்லா, கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸில் உள்ள பல ரோந்துப் பகுதிகளுக்குச் செல்ல இந்தியாவுக்கு ஏன் இன்றளவும் அனுமதி மறுக்கப்படுகிறது? சீன விவகாரத்தில் சாதுவாக நடப்பதே மோடியின் கொள்கையாக உள்ளது என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments