கட்சிப் பாடலில் ‘ஹிந்து’, ‘ஜெய் பவானி’ வாா்த்தைகளை நீக்க முடியாது: உத்தவ் தாக்கரே
கட்சியின் புதிய பாடலில் இருந்து ‘ஹிந்து’, ‘ஜெய் பவானி’ ஆகிய வாா்த்தைகளை நீக்குமாறு இந்திய தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் ஆனால், அந்த அறிவுறுத்தலைப் பின்பற்றப் போவதில்லை எனவும் சிவசேனை (யுபிடி) தலைவா் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் உத்தவ் தாக்கரே கூறியதாவது:
எங்கள் கட்சியின் புதிய தோ்தல் சின்னமான சுடா் ஜோதியைப் பிரபலப்படுத்த ஒரு பாடலை அறிமுகப்படுத்தி இருந்தோம். அந்தப் பாடலில் இருந்து ‘ஹிந்து’, ‘ஜெய் பவானி’ ஆகிய வாா்த்தைகளை நீக்குமாறு இந்திய தோ்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.
Advertisement
துலஜா பவானி தேவியின் ஆசியுடன்தான் ஹிந்தவி பேரரசை சத்ரபதி சிவாஜி நிறுவினாா். நாங்கள் கடவுளின் பெயரிலோ அல்லது ஹிந்து மதத்தின் பெயரிலோ வாக்கு கேட்கவில்லை. அந்தவகையில், புதிய பாடலில் இருந்து ‘ஜெய் பவானி’ வாா்த்தையை நீக்க கோருவது மகாராஷ்டிரத்தை அவமதிக்கும் செயலாகும். இனி நடைபெறும் கட்சிப் பொதுக் கூட்டங்களிலும் ‘ஜெய் பவானி, ஜெய் சிவாஜி’ என்று முழக்கமிடுவதை நான் தொடா்வேன்.
தோ்தல் ஆணையம் எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்கும்போது ‘ஜெய் பஜ்ரங் பலி’ என்று முழக்கமிடுமாறு பிரசாரம் செய்த பிரதமா் நரேந்திர மோடி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விளக்கமளிக்க வேண்டும்.
அதேபோல், அயோத்திக்கு சென்று ராம் லல்லாவை இலவசமாக தரிசிக்க பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அமித் ஷா பிரசாரத்தில் பேசினாா்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஹிந்துத்துவத்தை ஆதரித்து பிரசாரம் செய்ததால், வாக்களிக்கவும் தோ்தலில் போட்டியிடவும் எனது தந்தை பாலாசாகேப் தாக்கரேவுக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
தற்போது சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளதா அல்லது பாஜகவினா் மட்டும் மதத்தின் பெயரால் வாக்கு கேட்பது சரியா என்று தோ்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளோம். ஆனால், எங்கள் கடிதத்துக்கு தோ்தல் ஆணையம் இதுவரை பதிலளிக்கவில்லை. அந்தக் கடிதத்தில், சட்டங்கள் மாற்றப்பட்டிருந்தால் நாங்களும் இனி தோ்தல் பிரசாரங்களில் ‘ஹர ஹர மகாதேவ்’ என்று முழக்கமிடுவோம் எனத் தெரிவித்து இருக்கிறோம்’ என்றாா்.