மக்களவைத் தேர்தல்: முதல் கட்டம் 66.14%, 2-ஆம் கட்டம் 66.71% வாக்குப் பதிவு
புது தில்லி: மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவை எதிர்கொண்ட தமிழகத்தின் 39 தொகுதிகள், புதுச்சேரியின் ஒரு தொகுதி உள்பட 102 தொகுதிகளில் 66.14 சதவீத வாக்குகளும், 88 தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 66.71 சதவீத வாக்குகளும் பதிவானதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைக்கு ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் முதலிரண்டு தேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதம் தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளிவந்த நிலையில் அதிகாரபூர்வமாக எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகின என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
இதன்படி ஏப்ரல் 19-ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலில் 66.14 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில் ஆண் வாக்காளர்கள் 66.22 சதவீதம், பெண் வாக்காளர்கள் 66.07 சதவீதம், மூன்றாம் பாலினத்தவர் 31.32 சதவீதம்.
Advertisement
ஏப்ரல் 26-ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் 66.71 சதவீத வாக்குகள் பதிவாயின. அதில், ஆண் வாக்காளர்கள் 66.9 சதவீதம் , பெண் வாக்காளர்கள் 66.42 சதவீதம், மூன்றாம் பாலினத்தவர் 23.86 சதவீதம்.
2019 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்தத் தேர்தலின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின்போது பதிவான வாக்குகள் விகிதம் சற்று குறைந்துள்ளது. 2019- ஆம் ஆண்டில், முதல் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு முறையே 69.43 சதவீதம் மற்றும் 69.17 சதவீதமாக இருந்தது.
முதல்கட்ட வாக்குப் பதிவின்போது, லட்சத்தீவில் அதிகபட்சமாக 84.16 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதே நேரத்தில் ஏப்ரல் 19- ஆம் தேதி தேர்தலை எதிர்கொண்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குறைந்தபட்சமாக பிகாரில் 49.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதை தேர்தல் ஆணைய புள்ளிவிவரம் மூலம் அறிய முடிகிறது.
இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின்போது, மணிப்பூரில் அதிகபட்சமாக 84.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேசமயம் உத்தர பிரதேசத்தில் 55.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.