முகப்பு
இந்தியா

இடஒதுக்கீட்டில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம்: உச்சநீதிமன்றம்

உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு உரிமை உள்ளதாக அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு

Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 7:27 AM
உச்சநீதிமன்றம் - DIN
பகிர்:

கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் பட்டியலின (எஸ்.சி.) மற்றும் பழங்குடியின (எஸ்.டி.) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்பட 6 நீதிபதிகள் உள்ஒதுக்கீடு செல்லும் எனத் தெரிவித்துள்ளனர். நீதிபதி பெலா எம்.திரிவேதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இ.வி.சின்னையா மற்றும் ஆந்திர மாநில அரசுக்கு இடையேயான வழக்கில் கடந்த 2004ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தீர்ப்பை வாசித்த டி.ஒய். சந்திரசூட், “அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு உள்ஒதுக்கீட்டை மீறவில்லை, பட்டியலின உட்பிரிவுகள், பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாததால் உள் ஒதுக்கீடு வழங்கலாம்.

பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு பஞ்சாப் அரசு கொண்டு வந்த உள் ஒதுக்கீடு செல்லும், எஸ்.சி., எஸ்.டி. உள் ஒதுக்கீட்டை மாநில அரசு வழங்க முடியும்” எனத் தெரிவித்தார்.

மேலும், நீதிபதி கவாய், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரின் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களை உள்ஒதுக்கீட்டில் இருந்து நீக்க மாநில அரசுகள் கொள்கை வடிவமைக்க வேண்டும். அதன்மூலம் தான் உண்மையான சமூக நீதியை பெற முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி பெலா எம்.திரிவேதி, “மூன்று நீதிபதி எக்காரணமும் தெரிவிக்காமல் உள்ஒதுக்கீடுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். சட்டப்பேரவைக்கு சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் இல்லாத பட்சத்தில், எஸ்.சி. பிரிவினருக்குள் துணை வகைப்படுத்த எந்த உரிமையும் இல்லை. எனவே சின்னையா வகுத்துள்ள சட்டம் சரியானது என்று கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில், ‘பஞ்சாப் பட்டியலின மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கான அரசு வேலைவாய்ப்புகள் இடஒதுக்கீடு சட்டம் 2006’ என்ற சட்டத்தை நிறைவேற்றியது.

இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த 2010-ஆம் ஆண்டு விசாரித்த பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம், ‘அரசு வேலைவாய்ப்புகளில் எஸ்.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மாநில அரசு 50 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், 2004-ஆம் ஆண்டில் இ.வி.சின்னையா மற்றும் ஆந்திர மாநில அரசுக்கு இடையேயான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு அளித்த தீா்ப்பை மீறும் செயல்’ என்றும் குறிப்பிட்டு, ‘பஞ்சாப் பட்டியலின மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கான அரசு வேலைவாய்ப்புகள் இடஒதுக்கீடு சட்டம் 2006’ சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இ.வி.சின்னையா மற்றும் ஆந்திர மாநில அரசுக்கு இடையேயான வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு கடந்த 2004-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பில், ‘அரசியல் சாசனப் பிரிவு 341-இன் கீழ், குடியரசுத் தலைவா் பட்டியலில் இருந்து எஸ்.சி. பிரிவின் கீழான துணைப் பிரிவுகளை நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. மாநில சட்டப்பேரவைகளுக்குக் கிடையாது’ என்று குறிப்பிட்டது.

உயா்நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து மாநில அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதில், ‘உச்சநீதிமன்றத்தின் 2004-ஆம் ஆண்டு தீா்ப்பு பஞ்சாப் மாநிலத்துக்குப் பொருந்தாது’ என்று குறிப்பிட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு, ‘இ.வி.சின்னையா மற்றும் ஆந்திர மாநில அரசுக்கு இடையேயான வழக்கின் தீா்ப்பை தங்களால் மறு ஆய்வு செய்ய இயலாது. இந்த விவகாரத்தை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தது.

இதைப் பரிசீலித்த தலைமை நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.