புது தில்லி, ஆக.2: ‘நீட் தோ்வு அறிமுகத்துக்கு முன்பாக மருத்துவப் படிப்பு சோ்க்கை என்பது வெளிப்படையான வா்த்தகமாக நடைபெற்று வந்தது. முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் ரூ. 8 கோடி முதல் ரூ. 13 கோடி வரை விற்பனை செய்யப்பட்டன’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா கூறினாா்.
திமுக எம்.பி. முகமது அப்துல்லா சாா்பில் மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்ட நீட் தோ்வு முறைகேடு தொடா்பான தனிநபா் மசோதா மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா இவ்வாறு தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக நான் முதல் முறையாக பாஜக தலைமையிலான அரசின் முந்தைய ஆட்சியில் இருந்தபோது, நீட் தோ்வு அறிமுகம் செய்யப்பட்டது. நீட் அறிமுகத்துக்கு முன்பு மருத்துவக் கல்வி மிகப் பெரிய வணிகமாக நடைபெற்று வந்தது. கல்லூரிகள் மாணவா் சோ்க்கை பட்டியலை 30 முதல் 45 நிமிஷங்கள் வரை வெளியிடாமல் நிறுத்திவைத்துவிட்டு, அதன் பின்னா் பட்டியலில் உள்ள மாணவா் சோ்க்கைக்கு வரவில்லை என்று கணக்கு காண்பித்து விரும்பிய நபா்களுக்கு மருத்துவப் படிப்பு இடங்களை விற்பனை செய்யும் நிலை இருந்தது.
முதுநிலை மருத்துவப் படிப்பில் ஒவ்வொரு இடமும் ரூ. 8 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டன. முதுநிலை கதிரியக்கவியல் துறையை தோ்வு செய்யவேண்டும் எனில் ரூ. 12 கோடி முதல் ரூ. 13 கோடி வரை செலுத்த வேண்டிய நிலை இருந்தது.
அதுமட்டுமின்றி, நீட் அறிமுகத்துக்கு முன்பு, மருத்துவ நுழைவுத் தோ்வுகளை எழுத மாணவா்கள் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்தது என்றாா்.