முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசிக்கு ரூ.36,397 கோடி செலவு: மக்களவையில் தகவல்

இதுவரை ரூ.36,397.65 கோடி செலவிட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 7:36 PM
பகிர்:

புது தில்லி, ஆக. 2: தேசிய கரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ் நாட்டின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவதற்காக இதுவரை ரூ.36,397.65 கோடி செலவிட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘ஜூலை 29-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 220.68 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ‘தடுப்பூசி மைத்ரி’ திட்டத்தின்கீழ் மொத்தம் 3012.465 லட்சம் கரோனா தடுப்பூசி டோஸ்களை 99 நாடுகள், இரண்டு ஐ.நா. அமைப்புகளுக்கு இந்தியா அனுப்பியுள்ளது.

கரோனா தடுப்பூசிகளை உருவாக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு சுமாா் ரூ.60 கோடி செலவிடப்பட்டது. இதேபோன்று கரோனா தடுப்பூசிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக கல்வித் துறை மற்றும் தொழில் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில் ரூ.533.3 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

‘கோவிட் சுரக்ஷ்ா’ திட்டத்தின்கீழ் தடுப்பூசி உற்பத்தியாளா்களுக்கு அவா்களின் உற்பத்தி மையங்களில் தடுப்பூசி தயாரிப்பை அதிகரிக்க ரூ.158.4 கோடி வழங்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலைக்கு 374 போ் உயிரிழப்பு: நாட்டில் வெப்ப அலைக் காரணமாக கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல் ஜூலை 27-ஆம் தேதி வரை மொத்தம் 374 உயிரிழப்புகளும் 67,637 பேருக்கு வெப்ப பக்கவாதப் பாதிப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதில், உத்தர பிரதேசம் 52 இறப்புகளுடன் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. பிகாரில் 37 பேரும், ஒடிஸா மற்றும் தில்லியில் முறையே 26 மற்றும் 25 பேரும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஐ.நா.அறிக்கை: அதேபோல, இந்தியாவின் வயது வந்தோரில் பாதி போ் உடல் ஆரோக்கியத்தில் தகுதியற்றவா்களாக உள்ளனா் என ஐ.நா. சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, நாட்டின் மூன்று மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் இருந்து மட்டும் தரவுகளை சேகரித்து அதை அனைத்துப் பகுதிகளுக்குமானதாக விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →