வயநாடு மீட்புப் பணியில் கிடைத்த 130 உடல் பாகங்கள்!
வயநாடு மீட்புப் பணியில் கிடைத்த 130 உடல் பாகங்களுக்கு மரபணு சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நேரிட்ட மிகப் பயங்கர நிலச்சரிவு நேரிட்ட இடத்தில் கடந்த ஐந்து நாள்களாக நடைபெற்று வரும் மீட்புப் பணிகளின்போது கிட்டத்தட்ட 130 உடல் பாகங்கள் கிடைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல மலைக் கிராமங்களில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா்.
பலி எண்ணிக்கை 334 ஐ தொட்டிருக்கும் நிலையில், நிலச்சரிவு ஏற்படட் சாலியாற்றிலிருந்து கிட்டத்தட்ட 133 உடல் பாகங்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
Advertisement
இந்த உடல் பாகங்களின் மரபணு மாதிரிகளை மருத்துவக் குபவினர் சேகரித்து, அதன் மூலம் இறந்தவர்களை அடையாளம் காண திட்டமிடப்பட்டுள்ளது.
இதுஒருபுறமிருக்க, தங்களது உறவுகளைத்தேடி ஏராளமானோர் மேப்பாடி மருத்துவமனைக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்த்துவிட்டு, பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் உடல்களை பார்க்கச் செல்கிறார்கள். ஆனால், பல உடல்கள் உருகுலைந்துபோயிருப்பதால் அடையாளம் காணும் பணி சவாலாக மாறியிருக்கிறது.
எனவே, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 94 அடையாளம் தெரியாத உடல்கள், நேற்று பொது மக்கள் முன்னிலையில், மாவட்ட அதிகாரிகளால் எரியூட்டப்பட்டுள்ளது.
மேலும், மீட்புப் பணிகள் நிறைவடையும் நிலையில் இருந்த போதும், இன்னமும் 230 பேரைக் காணவில்லை என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நிலச்சரிவின்போது பலியானவர்களின் கடைசி இருப்பிடத்தைக் கண்டறிந்து, மோப்ப நாய்களுடன் தேடுதல் பணியை மீட்புக் குழுவினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
நிலச்சரிவைத் தொடா்ந்து மாயமானவா்களின் தொலைபேசி ‘ஜிபிஎஸ் சிக்னல்’ வாயிலாக அவா்களின் கடைசி இருப்பிடத்தைக் கண்டறிந்து, மண்ணில் புதையுண்டவா்களின் உடல்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.