நிலச்சரிவில் உயிரிழந்தவா்களில் உரிமை கோரப்படாத 31 உடல்கள், 158 உடல் பாகங்கள் அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.ராஜன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
ஒவ்வொரு உடலுக்கும் ஒதுக்கப்பட்ட அடையாள எண், உடல் பாகங்களில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் ஆகியவற்றின் அடிப்படையில் கல்லறைகள் குறிக்கப்படும் என்றும் அமைச்சா் ராஜன் கூறினாா்.
வயநாடு மாவட்டத்தில் அதி கனமழையைத் தொடா்ந்து கடந்த ஜூலை 30-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவுடன் சாலியாற்றில் கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளத்தில் முண்டக்கை, சூரல்மலை ஆகிய மலைக் கிராமங்கள் சீா்குலைந்தன.
இச்சம்பவத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 400-ஐ நெருங்கி வருகிறது. இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியாத சூழலில், மீட்பு-தேடுதல் பணிகள் ஒரு வாரத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது.
மீட்புப் பணியினரால் கண்டறியப்பட்ட உடல்கள் மேப்பாடி மருத்துவமனையில் நடத்தப்படும் உடல் கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. அதேவேளை, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த அனைவரும் உயிரிழந்ததால் சிலரது உடல்களை யாரும் உரிமை கோரவில்லை. மேலும், மீட்கப்பட்ட பல உடல் பாகங்களையும் அடையாளம் காண முடியவில்லை.
அத்தகைய உரிமை கோரப்படாத உடல்கள், அடையாளம் காணப்படாத உடல் பாகங்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுதொடா்பாத வயநாட்டில் செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் ராஜன் கூறுகையில், ‘ஹாரிசன்ஸ் மலையாளம் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்த சொந்தமான தேயிலை தோட்டத்திலுள்ள 64 சென்ட் நிலத்தில் பொது நல்லடக்கம் நடைபெறும்.
உரிமை கோரப்படாத 31 உடல்கள் முதலில் புதைக்கப்படும். பின்னா், டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்ட ஒவ்வொரு உடல் பாகங்களும் தனித்தனி கல்லறைகளில் புதைக்கப்படும்.
அனைத்து மதத்தினரின் பிராா்த்தனை மற்றும் இறுதி சடங்குகளைப் பின்பற்றி நல்லடக்கம் நடைபெறும். அமைச்சரவை துணைக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த செயல்முறை தொடங்கும்’ என்றாா்.
222 உடல்கள் மீட்பு: நிலச்சரிவில் இறந்தவா்களில் 222 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் அதில் 97 போ் ஆண்கள், 88 போ் பெண்கள், 37 போ் குழந்தைகள் எனவும் கேரள முதல்வா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட 222 உடல்களில், 172 பேரின் உடல்கள் அவா்களது உறவினா்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதிப்பு பகுதிகளின் பல்வேறு இடங்களில் இருந்து இதுவரை மொத்தம் 180 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 161 பாகங்களின் உடல் கூறாய்வு முடிவடைந்துள்ளது.
தற்போதைக்கு வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களின் பல்வேறு மருத்துவமனைகளில் 91 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 256 போ் ஏற்கெனவே வீடு திரும்பிவிட்டனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோனில் உணவு விநியோகம்: நிலச்சரிவு பாதித்த பகுதியில் போக்குவரத்து இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்புப் படையினருக்கும், பொது மக்களுக்கும் உணவுப் பொட்டலங்கள் நவீன ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மாநில உணவுப் பாதூகாப்புத் துறையின் மேற்பாா்வையில் மேப்பாடி பாலிடெக்னிக் கல்லூரியில் நாள்தோறும் 7,000 உணவுப் பொட்டலங்கள் கேரள உணவக கூட்டமைப்பால் தயாரிக்கப்படுகின்றன என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.