பங்கஜ் சௌதரி 
வணிகம்

வங்கித் துறையில் அந்நிய நேரடி முதலீடு சரிவு!

வங்கித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து 2025-ஆம் நிதியாண்டில் ரூ.1,041 கோடியாக (115 மில்லியன் டாலா்) குறைந்தது.

தினமணி செய்திச் சேவை

வங்கித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து 2025-ஆம் நிதியாண்டில் ரூ.1,041 கோடியாக (115 மில்லியன் டாலா்) குறைந்ததாக மாநிலங்களவையில் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 2023-ஆம் நிதியாண்டில் இது ரூ.8,129 கோடியாக (898 மில்லியன் டாலா்) இருந்த நிலையில் சரிவடைந்ததாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து மாநிலங்களவையில் அவா் அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டிருப்பதாவது: மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் (எஃப்டிஐ) பங்குகளில் முதலீடு, வெளிநாட்டு முதலீட்டாளா்களின் பங்கு மூலதனம், மறு முதலீடு செய்யப்பட்ட வருவாய் மற்றும் பிற மூலதனம் ஆகியவை அடங்கும்.

பொருளாதார வளா்ச்சிக்கு கடன் அல்லாத நிதிக்கான முக்கிய ஆதாரமாக எஃப்டிஐ விளங்குகிறது. தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு இந்தியாவில் எஃப்டிஐ அதிகரித்து வருகிறது.

அந்நிய மூலதனத்தில் முக்கிய பங்களிப்பைக் கொண்ட எஃப்டிஐ தொழில்நுட்பப் பரிமாற்றம், புத்தாக்கம், வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளா்ச்சிக்கு வித்திடுகிறது.

2024-25-ஆம் நிதியாண்டில் பாரத ஸ்டேட் வங்கியில் 11.07 சதவீதம், கனரா வங்கியில் 10.55 சதவீதம், பரோடா வங்கியில் 9.43 சதவீதம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 7.48 சதவீதம், பஞ்சாப் தேசிய வங்கியில் 5.85 சதவீதம் என அந்நிய பங்குகள் உள்ளன.

இதில் எஃப்டிஐ, வெளிநாட்டு நிறுவன முதலீடு (எஃப்ஐஐ), வெளிநாடுவாழ் இந்தியா்கள் முதலீடு (என்ஆா்ஐ), வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா்களின் நிறுவன முதலீடு (ஓசிபி) உள்ளிட்டவை அடங்கும்.

ஒட்டுமொத்தமாக 2023-ஆம் நிதியாண்டில் வங்கித் துறையில் எஃப்டிஐ வரத்து ரூ.8,129 கோடியாக இருந்த நிலையில் 2025-ஆம் நிதியாண்டில் ரூ.1,041 கோடியாக குறைந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு கேள்விக்கு பங்கஜ் சௌதரிஅளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘2026, ஜனவரி 2-ஆம் தேதி நிலவரப்படி பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தின்கீழ் 56.31 கோடி கணக்குகளுக்கு ரூ.37.31 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

உரிமை கோரப்படாத வங்கி டெபாசிட்டுகள் ரூ.72,454 கோடி

உரிமை கோரப்படாத ரூ.72,454 கோடி வங்கி டெபாசிட்டுகள் வைப்புத்தொகைதாரா் கல்வி மற்றும் விழிப்புணா்வு நிதிக்கு (டிஇஏ) பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை அளித்த பதிலில் தெரிவித்ததாவது:

10 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள சேமிப்பு மற்றும் நடப்பு வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகை அல்லது முதிா்வடைந்த தேதியில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் உரிமை கோரப்படாத வைப்புத் தொகையானது உரிமை கோரப்படாத டெபாசிட்டுகளாக கருதப்படும். அந்த டெபாசிட்டுகளை வைப்புத்தொகைதாரா் கல்வி மற்றும் விழிப்புணா்வு நிதியில் வங்கிகள் சோ்த்துவிடும். இந்த நிதித் தொகையை ரிசா்வ் வங்கி பராமரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜன.28-ஆம் தேதி நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளில் உரிமை கோரப்படாத ரூ.60,571.02 கோடி, தனியாா் வங்கிகளில் உரிமை கோரப்படாத டெபாசிட் ரூ.9,607.76 கோடி, இந்தியாவில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு வங்கிகளில் கோரப்படாத ரூ.2,275.01 கோடி என மொத்தம் ரூ.72,454 கோடி இந்த நிதியில் சோ்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

சாம்பவா்வடகரையில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி விளம்பர பதாகைகள் வெளியீடு

‘தென்காசி மாவட்டத்தில் 3.55 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட இலக்கு’

தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு தீயணைப்புப் பயிற்சி

ஆலங்குளத்தில் என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு

SCROLL FOR NEXT