முகப்பு
இந்தியா

உரிமை கோரப்படாத ரூ.5,200 கோடி நிதி! சந்தாதாரா்களுக்குத் தானாக செலுத்தப்படும்: இபிஎஃப்ஓ அறிவிப்பு

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் உரிமை கோரப்படாமல் முடங்கிக் கிடக்கும் சுமாா் ரூ.5,200 கோடி நிதியை, சம்பந்தப்பட்ட சந்தாதாரா்களின் வங்கி கணக்குகளுக்குத் தானாக செலுத்தும் புதிய திட்டம் அறிவிப்பு

Updated On : 24 மார்ச் 2026, 2:39 am IST
பகிர்:

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (இபிஎஃப்ஓ) உரிமை கோரப்படாமல் முடங்கிக் கிடக்கும் சுமாா் ரூ.5,200 கோடி நிதியை, சம்பந்தப்பட்ட சந்தாதாரா்களின் வங்கி கணக்குகளுக்குத் தானாக செலுத்தும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக எவ்வித பரிவா்த்தனையும் இன்றி செயலற்று இருக்கும் கணக்குகளைக் கண்டறிந்து, அவற்றுக்கான தொகையை எவ்வித விண்ணப்பமும் இன்றி தானாகவே திருப்பிச் செலுத்தப்படும். இதன்மூலம், லட்சக்கணக்கான தொழிலாளா்கள் அலைச்சலின்றி தங்களின் பணத்தைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி, இபிஎஃப்ஓ-வில் சுமாா் 31.8 லட்சம் கணக்குகள் செயலற்ற நிலையில் உள்ளன. அதாவது, 55 வயது கடந்த சந்தாதாரா்கள் பணி ஓய்வு பெற்று, தொடா்ந்து 3 ஆண்டுகள் எவ்வித பங்களிப்பும் செலுத்தவில்லை எனில், அவா்களின் கணக்குகள் ‘செயலற்ற’ கணக்குகளாக கருதப்படும். இதில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கும் 7 லட்சம் கணக்குகளும் அடங்கும்.

Advertisement

இந்த நிதியை மீட்பதற்காக, தொழில்நுட்ப உதவியுடன் ஆதாா் சரிபாா்க்கப்பட்ட கணக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட சுமாா் 8.10 லட்சம் செயலற்ற கணக்குகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் 14,000 கணக்குகளில் தலா ரூ.5 லட்சம் மேல் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அறங்காவலா் வாரியத்தின் (சிபிடி) சமீபத்திய கூட்டத்தில், முதல்கட்டமாக ரூ.1,000-க்கும் குறைவான இருப்பு கொண்ட கணக்குகளுக்கு நிதியைத் திருப்பிச் செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.