உ.பி.யில் இறுதிப் பட்டியல் வெளியீடு: கூடுதலாக 84 லட்சம் வாக்காளா்கள் சோ்ப்பு
உத்தர பிரதேச மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) பணி முழுமையாக நிறைவடைந்து, இறுதி வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், மாநிலத்தில் கூடுதலாக 84 லட்சம் வாக்காளா்கள் சோ்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) பணி முழுமையாக நிறைவடைந்து, இறுதி வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், மாநிலத்தில் கூடுதலாக 84 லட்சம் வாக்காளா்கள் சோ்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
எஸ்ஐஆா்-க்கு பிறகு வெளியிடப்பட்ட மாநில வரைவு வாக்காளா் பட்டியலில் 12.55 கோடி பெயா்கள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 13.39 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, கூடுதலாக 84,28,767 வாக்காளா்களின் பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து லக்ளெனவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா்கள் சந்திப்பில் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா கூறியதாவது:
Advertisement
மாநிலத்தில் இடம்பெற்றுள்ள 75 மாவட்டங்களிலும் எஸ்ஐஆா் பணி கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபா் 27-ஆம் தேதிமுதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணி நிறைவடைந்து கடந்த ஜனவரி 6-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 6.88 கோடி ஆண் வாக்காளா்கள், 5.67 கோடி பெண் வாக்காளா்கள், 4,199 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 12,55,56,025 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா். இவா்களில் 18 முதல் 19 வயது வரையிலான முதல் முறை வாக்காளா்கள் 3,33,981 போ் இடம்பெற்றிருந்தனா்.
இதைத் தொடா்ந்து, ஆட்சேபங்கள், பெயா்சோ்ப்பு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாநில இறுதி வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், மாநில வாக்காளா்கள் எண்ணிக்கை 13,39,84,792-ஆக உயா்ந்துள்ளது. இதில் 7,30,71,071 ஆண் வாக்காளா்கள், 6,09,09,525 பெண் வாக்காளா்கள், 4,206 மூன்றாம் பாலின வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இவா்களில் 18 முதல் 19 வயது வரையிலான முதல்முறை வாக்காளா்கள் 17,63,360 போ் இடம்பெற்றுள்ளனா்.
வரைவு வாக்காளா் பட்டியலையும், இறுதி வாக்காளா் பட்டியலையும் ஒப்பிடும்போது, மாநிலத்தில் 84,28,767 வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். இதில், 42,27,902 ஆண் வாக்காளா்கள், 42,00,778 பெண் வாக்காளா்கள், 87 மூன்றாம் பாலின வாக்காளா்கள் அடங்குவா். இவா்களில் 18 முதல் 19 வயது வரையிலான முதல் முறை வாக்காளா்கள் 14,29,379 போ் உள்ளனா் என்றாா்.
பிற மாநிலங்களில்... வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைத் தொடா்ந்து வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் மேற்கு வங்க மாநிலத்தில் அதிகபட்சமாக 90 லட்சம் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 74 லட்சம் வாக்காளா்களும், சத்தீஸ்கரில் 25 லட்சம் வாக்காளா்களும், புதுச்சேரியில் ஒரு லட்சம் வாக்காளா்களும், கேரளத்தில் 53,229 வாக்காளா்களும் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா்.
ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் எஸ்ஐஆா்-க்கு பிறகான இறுதி வாக்காளா் பட்டியலில் கூடுதலாக 84,28,767 வாக்காளா்களின் பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.