என்ஜின் குத்தகை நிலுவை: ஸ்பைஸ்ஜெட் ரூ.74 கோடி செலுத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
விமான என்ஜின் குத்தகை மற்றும் பராமரிப்புக் கட்டணமாக சுமாா் 80 லட்சம் டாலா் (ரூ.74 கோடி) நிலுவைத் தொகையை குத்தகை நிறுவனத்துக்குச் செலுத்த ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்துக்கு லண்டன் வணிக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘சன்போ்ட் பிரான்ஸ் 02 எஸ்ஏஎஸ்’ நிறுவனத்திடமிருந்து குத்தகையாக பெற்ற 3 விமான என்ஜின்களுக்காக கடந்த 2020 நவம்பா் மாதம் முதல் பராமரிப்புக் கட்டணங்களையும், 2022 ஜனவரி முதல் குத்தகை வாடகையையும் ஸ்பைஸ்ஜெட் செலுத்தத் தவறியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக குத்தகை நிறுவனம் கடந்த 2022-லேயே நோட்டீஸ் அனுப்பியதோடு, 2022-2023 காலகட்டத்தில் தனது 3 என்ஜின்களையும் திரும்பப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
தொடரும் நிதி நெருக்கடி: ‘போயிங் 737 மேக்ஸ்’ ரக விமானங்களின் கட்டாய தரையிறக்கம் மற்றும் கரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய சூழல் காரணமாக ஸ்பைஸ்ஜெட் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
அண்மைக்காலமாக, ஆகாசா ஏா் போன்ற புதிய நிறுவனங்களின் போட்டியால் தனது சந்தை மதிப்பையும் ஸ்பைஸ்ஜெட் இழந்து வருகிறது. இந்நிலையில், லண்டன் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அந்நிறுவனத்துக்கு மேலும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.