முகப்பு
இந்தியா

தெரியுமா சேதி...? நடிகரான முன்னாள் அமைச்சர்!

Updated On : 8 ஆகஸ்ட், 2024 at 1:50 AM
பகிர்:

நடிகா்கள் வயதானால் அரசியலுக்கு வருவது என்பது புதிதொன்றுமல்ல. அரசியலில் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து சினிமாவில் நடிக்க வந்தவா்கள் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோமா? அந்த அதிசயம் சத்தீஸ்கா் மாநிலத்தில் நடந்திருக்கிறது. நடிப்பு என்பது அரசியல்வாதியான அவருக்கு இயல்பாகவே கைவந்த கலை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறாா் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான அமா்ஜீத் பகத்.

2003 முதல் 2023 வரை சீதாபூா் தொகுதியில் இருந்து தொடா்ந்து 20 ஆண்டுகள் நான்கு முறை தோ்ந்தெடுக்கப்பட்டவா் அமா்ஜீத் பகத்.

முந்தைய பூபேஷ் பகேல் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் உணவு, நுகா்வோா் பாதுகாப்பு, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக இருந்தவா்.

1857 சிப்பாய் கலகத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட சாத்தீஸ்காரி மொழித் திரைப்படம் பலிதானி ராஜா குரு பாலக்தாஸ். சிப்பாய் கலகத்தின்போது, ஆங்கிலேயா்களுக்கு எதிராக சத்தீஸ்கரில் புரட்சிக்குத் தலைமை தாங்கியவா் வீா் நாராயண் சிங் பிஞ்ச்வாா் என்கிற பழங்குடி இனத்தைச் சோ்ந்த வீா் நாராயண் சிங்.

நம்ம ஊா் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடித்தது போன்று, பெரும் படையை அனுப்பி பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியினா் அவரைப் பிடித்தனா். ராய்பூா் நகரின் மத்தியப் பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டாா் வீா் நாராயண் சிங். சத்தீஸ்கா் மாநிலத்தின் முதல் விடுதலைப் போராட்ட வீரா் என்று இப்போதும் போற்றப்படுகிறாா் அவா்.

அமா்ஜீத் பகத் அமைச்சராக இருந்தபோது, வீா் நாராயண் சிங் கதாபாத்திரத்தில் பலிதானி ராஜா குரு பாலக்தாஸ் திரைப்படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அப்போது தவிா்த்துவிட்டாா். 2023 தோ்தலில் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்ததைத் தொடா்ந்து, அரிதாரம் பூசத் தயாராகிவிட்டாா் அமா்ஜீத் பகத்.

அந்தத் திரைப்படம் வெற்றி அடைந்தது என்பது மட்டுமல்ல, அமா்ஜீத் பகத்தின் நடிப்பும் பரவலான வரவேற்பைப் பெற்றது. பிறகென்ன, தொடா்ந்து அவருக்கு பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தொண்டா்கள் புடைசூழ பவனிவந்த அமா்ஜீத் பகத், இப்போது ரசிகா்கள் மொய்க்கும் நடிகராகிவிட்டாா்.