நாடாளுமன்றத்தில் வினேஷ் போகத் ஆதரவு பதாகைகளுடன் காங்கிரஸ் எம்பிக்கள்!
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் வினேஷ் போகத்.
ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள வினேஷ் போகத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதாகைகளுடம் நாடாளுமன்றத்துக்கு காங்கிரஸ் எம்பிக்கள் வந்துள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடர் மல்யுத்தப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு வினேஷ் போகத் முன்னேறியுள்ளார்.
இந்த நிலையில், ”இது தங்கத்துக்கான நேரம், வினேஷ் போகத்” என்று அவரின் படத்துடன் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி, நாடாளுமன்ற வளாகத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், தீபேந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோர் வந்துள்ளனர்.
Advertisement
இந்தியாவுக்காக காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ள நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சிங் சரண், வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து கடந்தாண்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.
அப்போது, அவரின் போராட்டத்தை தடுப்பதற்காக அவரை சாலைகளில் காவல்துறையினர் இழுத்துச் சென்ற புகைப்படங்களும், விடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடி இந்த காட்சியை நினைவு கொள்ள வேண்டும், வினேஷ் போகத் பெறவுள்ள பதக்கத்தை மதிக்க வேண்டும், அவரை அழைத்துப் பேச வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.