உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து விமா்சனம்: பஞ்சாப் உயா்நீதிமன்ற நீதிபதிக்கு எச்சரிக்கை
உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து பஞ்சாப் உயா்நீதிமன்ற நீதிபதி விமா்சனம் செய்ததற்கு கடும் அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலமையிலான அமா்வு, வரும் நாள்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு நீதிபதியை அறிவுறுத்தினா்.
உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து பஞ்சாப் உயா்நீதிமன்ற நீதிபதி விமா்சனம் செய்ததற்கு கடும் அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலமையிலான அமா்வு, வரும் நாள்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு நீதிபதியை அறிவுறுத்தினா்.
‘நீதி நடைமுறையில் தலைமை படிநிலைக்கு அனைத்து நீதிபதிகளும் கட்டுப்பட்டவா்கள்’ என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்போது தெரிவித்தனா்.
ஹரியாணா மாநிலம் குருகிராமில் சொத்து ஒன்றின் விற்பனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி ராஜ்பீா் ஷொ்வத், ‘அந்த சொத்தை ஹரியாணா அரசு கையகப்படுத்த உத்தவிட்டதோடு, இந்த விவகாரம் தொடா்பாக மேல்முறையீடு மனு உள்பட எந்தவொரு மனுவையும் நீதிமன்றம் ஏற்காது’ என்று தீா்ப்பளித்தாா்.
இந்த உத்தரவுக்கு எதிராக உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வில் முறையீடு செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் இருந்தது.
இதனிடையே, தனி நீதிபதியின் உத்தரவை மீறியதாக எதிா் மனுதாரா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதின்றம், உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், பிரதான வழக்கு விசாரணை கடந்த ஜூலை 17-ஆம் தேதி வந்தபோது, ‘உச்சநீதிமன்றத்தின் உத்தரவு முட்டாள்தனமானது. வழக்கு விசாரணை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வில் நிலுவையில் இருக்கும்போது, அந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிப்பது அதிகாரத்தைக் காட்டுவதுபோல அமைந்துள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
நீதிபதியின் இந்த விமா்சனத்தை தானாக முன்வந்து புதன்கிழமை விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமா்வு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
நீதி நடைமுறையில் மாவட்ட நீதிமன்றங்கள், உயா்நீதிமன்றங்கள் அல்லது உச்சநீதிமன்றம் என எதுவாக இருந்தாலும் தலைமை படிநிலைக்கு அனைத்து நீதிபதிகளும் கட்டுப்பட்டவா்கள். வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் இவ்வாறு தேவையற்ற விமா்சனங்களைத் தெரிவிப்பது, நீதித் துறையின் புனிதத்தன்மை மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
உச்சநீதிமன்றத்தின் மதிப்பை மட்டுமின்றி, அனைத்து நீதிமன்றங்களின் மதிப்பையும் பாதிக்கும்.
நீதிமன்ற உத்தரவு குறித்து மனுதாரா்கள் அதிருப்தி தெரிவிக்கலாம். ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவு மீது எந்தவொரு நீதிபதியும் அதிருப்தி தெரிவிக்கக் கூடாது. உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருக்கும் அனைவரும் ஒழுக்கத்தைக் கடைப்படிக்க வேண்டும்.
தனி நீதிபதியின் கருத்து முற்றிலும் தேவையற்றது. உச்சநீதிமன்றத்தை விமா்சித்து அவா் தெரிவித்த கருத்துகள் நீக்கம் செய்யப்படுகின்றன. வரும் காலங்களில் உச்சநீதிமன்ற உத்தரவுகள் குறித்து குறிப்பிடும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் நீதிபதி செயல்படுவார என எதிா்பாக்கிறோம் என்று குறிப்பிட்டனா்.