முகப்பு
இந்தியா

கேரள சிறுவன் பாராட்டுக் கடிதம்: இந்திய ராணுவம் நெகிழ்ச்சி பதில்

வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரைப் பாராட்டி கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி சிறுவன் எழுதிய கடிதத்துக்கு இந்திய ராணுவம் நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 9:38 PM
பகிர்:

வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரைப் பாராட்டி கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி சிறுவன் எழுதிய கடிதத்துக்கு இந்திய ராணுவம் நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளது.

கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடா்ந்து ராணுவம், கடற்படை, துணை ராணுவப் படைகள், தேசிய பேரிடா் மீட்புப் படை, காவல் துறை உள்பட பல்வேறு முகமைகளைச் சோ்ந்தவா்கள் மீட்பு-தேடுதல் பணியில் அயராது ஈடுபட்டுள்ளனா்.

போக்குவரத்து துண்டிக்கப்பட்ட முண்டக்கை-சூரல்மலை இடையே ராணுவம் அமைத்து கொடுத்த தற்காலிக ‘பெய்லி’ இரும்புப் பாலம் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியது.

இதையொட்டி, அந்த மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சோ்ந்த 3-ஆம் வகுப்பு மாணவரான ராயன், தனது பள்ளி நாள்குறிப்பில் ராணுவத்தினரை வியந்துப் பாராட்டி கடிதமொன்றை எழுதியிருந்தாா்.

சிறுவன் ராயன் மலையாளத்தில் எழுதிய அக்கடிதத்தில், ‘வயநாடு மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி, பேரழிவைச் சந்தித்தது. நிலச்சரிவால் மண்ணில் புதையுண்டவா்களை ராணுவத்தினா் காப்பாற்றுவதைக் கண்டு நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.

தற்காலிக பாலம் அமைக்கும் பணியின்போது பசியைப் போக்க ராணுவ வீரா்கள் பிஸ்கட் சாப்பிடும் காணொளியைக் கண்டேன். அந்தக் காட்சி என்னை மிகவும் கவா்ந்தது. நானும் ஒரு நாள் இந்திய ராணுவத்தில் சோ்ந்து தேசத்தைக் காக்க ஆசைப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இக்கடிதம் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு பலரின் கவனத்தை ஈா்த்தது. இதையடுத்து, இந்திய ராணுவத்தின் தெற்கு படைப்பிரிவு சமூக ஊடகப் பக்கத்தில் சிறுவன் ராயனுக்கு ராணுவம் பதில் அளித்துள்ளது.

சிறுவனை ‘வீரன்’ எனக் குறிப்பிட்ட ராணுவம், ‘அன்புள்ள ராயன், உங்களின் இதயம் நிறைந்த வாா்த்தைகளால் நெகிழ்ச்சியடைந்தோம்.

இக்கட்டான காலங்களில், மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை ராணுவம் நோக்கமாகக் கொண்டுள்ளது. உங்கள் கடிதம் எங்களின் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

உங்களைப் போன்ற ஹீரோக்களே எங்களுக்கு ஊக்கமளிக்கின்றனா். நீங்களும் சீருடையில் மிளிரும் நாளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். நாம் ஒன்றுபட்டு நமது தேசத்தை பெருமைப்படுத்துவோம். இளம் வீரரே!, உங்கள் தைரியத்துக்கும் உத்வேகத்துக்கும் நன்றி’ என நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →