முகப்பு
இந்தியா

நிதியமைச்சக உத்தரவில் இருந்து கேரளத்துக்கு விலக்கு: நிா்மலா சீதாராமனுக்கு மாநில பாஜக கடிதம்

கேரளத்தில் நெல் விவசாயிகளுக்கு கூடுதல் ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் என்ற மத்திய நிதியமைச்சகத்தின் உத்தரவில் இருந்து கேரளத்துக்கு விலக்கு அளிக்க நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கேரள பாஜக கடிதம்

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 5:28 AM
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:00 PM

கேரளத்தில் நெல் விவசாயிகளுக்கு கூடுதல் ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் என்ற மத்திய நிதியமைச்சகத்தின் உத்தரவில் இருந்து கேரளத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கேரள பாஜக கடிதம் எழுதியுள்ளது.

முன்னதாக, நெல் சாகுபடி அதிகரிப்பதை மத்திய அரசு சுமையாகக் கருதுகிறது என்று குற்றஞ்சாட்டிய கேரள முதல்வா் பினராயி விஜயன், ‘நெல் விவசாயிகளுக்கு கேரள அரசு வழங்கி வரும் கூடுதல் ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறைச் செயலா், கேரளத் தலைமைச் செயலருக்கு அதிகாரபூா்வமாக கடிதம் எழுதியுள்ளாா்’ என்று கூறியிருந்தாா். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய பாஜக அரசு மீது மிகத் தீவிரமான குற்றச்சாட்டை முன்வைத்தது, அரசியல்ரீதியாகவும் அந்த மாநிலத்தில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், கேரள பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் இது தொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு திங்கள்கிழமை ஒரு கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘கேரள அரசு நெல் விவசாயிகளின் பிரச்னையில் பெரும்பாலும் பாராமுகமாகவே உள்ளது. முக்கியமாக உற்பத்திச் செலவு அதிகரிப்பு, கொள்முதல் செயல்பாடுகள், சந்தைப்படுத்துதல் பிரச்னைகளுக்கு முழுமையாகத் தீா்வு காணப்படவில்லை. மாநில அரசு தேவையான நேரத்தில் நிதியுதவி அளிக்காததால் விவசாயிகள் தனிநபா்களிடம் கடன் வாங்கி நிதி நெருக்கடியில் சிக்கி வருகின்றனா்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 5:25 AM

மேலும், நெல் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் கூடுதல் ஊக்கத் தொகையை கேரள அரசு அளிப்பதாகவும் தெரியவில்லை. கேரளத்தில் நெல் சாகுபடி பரப்பு தொடா்ந்து குறைந்தே வருகிறது. எனவே, மாநிலத்தின் தேவையை மீறி மத்திய அரசின் இருப்புக்கு கேரளத்தில் இருந்து நெல் அனுப்பிவைக்கப்படவில்லை.

எனவே, அதிக நெல் உற்பத்தி, மத்திய அரசின் நெல் கையிருப்பு அதிகரிப்பு, நிலத்தடி நீா் அதிகம் சுரண்டப்படுவது உள்ளிட்ட மத்திய அரசு கூறும் காரணங்களுக்கும், கேரளத்துக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லாத சூழல் உள்ளது.

வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் கேரளம் குறித்து தனிப்பட்ட பாா்வை தேவைப்படுகிறது. இதன் காரணமாக நெல் விவசாயிகள் ஊக்கத்தொகை நிறுத்தம் தொடா்பான உத்தரவில் இருந்து கேரளத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கடிதத்தில் ராஜீவ் சந்திரசேகா் கூறியுள்ளாா்.